January 6, 2017
தண்டோரா குழு
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் உறவினர் டி.டி.வி. தினகரனுக்கு அந்நியச் செலவாணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட 28 லட்சம் ரூபாய் அபராதத்தை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) உறுதி செய்தது.
1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. அந்த நேரத்தில், ‘தான் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை பெற்றவன்’ என்று தினகரன் வாதிட்டார். அந்த வாதத்தை ஏற்க மறுத்த அமலாக்கத் துறை அவருக்கு ரூ. 28 லட்சம் அபராதம் விதித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் டிடிவி தினகரன். இந்த மனு நீதிபதி மகாதேவன் தலைமையிலான பெஞ்ச் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். டி.டி.வி. தினகரனுக்கு விதிக்கப்பட்ட 28 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது சரியே என்று தீர்ப்பளிக்கப்பட்டது.