October 27, 2022 தண்டோரா குழு
கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே கார் வெடித்து ஜமேசா முபின் என்பவர் இறந்து போன வழக்கு தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தலைமையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர், மேற்கு மண்டல ஐ.ஜி, தேசிய புலனாய்வு முகமையின் துணை தலைவர் மற்றும் எஸ்.பி, கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி. மற்றும் கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்தை பாதுகாத்த உக்கடம் காவல் நிலைய போலீசார், வழக்கில் தொடர்புடைய மாருதி கார் வாகனத்தின் உரிமையாளர்கள் கைமாறி இறுதியாக இறந்துபோன நபர் விபரம் வரை கண்டுபிடித்த போலீசார் மற்றும் இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து எதிரிகளை கைது செய்த போலீசார் ஆகியோர் என மொத்தம் 27 பேருக்கு பாராட்டுச் சான்றிதழும், பண வெகுமதியும் டி.ஜி.பி.யால் வழங்கப்பட்டது.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இவ்வழக்கில் சம்பவ தினமான கடந்த 23ம் தேதி இரவு சம்பவ இடத்திற்கு அருகில் உக்கடம் காவல்நிலைய எஸ்.ஐ. செல்வராஜன் மற்றும் அவருடன் இருந்த தலைமை காவலர் தேவக்குமார், காவலர் பாண்டியராஜா ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்ததின் காரணமாக மேற்படி இறந்துபோன நபர் வாகனத்தில் தொடர்ந்து செல்ல வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம் என்று தெரியவருகிறது. அதன் காரணமாக, வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீசாருக்கும் பாராட்டுச் சான்றிதழும், வெகுமதியும் வழங்கப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு இறந்துபோன ஜமேஷா முபின் வீட்டை முறையாக, முழுமையாக சோதனையிட்டு வீட்டிலிருந்த வெடிபொருட்களை கைப்பற்றியதின் வாயிலாக எந்தவித அசம்பாவிதமும் நிகழாவண்ணம் தடுத்துள்ளார்கள். அவர்களின் அந்த சிறப்பான பணிக்காக வெகுமதி வழங்கப்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசார், கோவை மாநகர் முழுவதும் மேற்கொண்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு நகரில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. மேலும் வரும் 31ம் தேதியன்று கோவை மாநகரில் அறிவிக்கப்பட்டுள்ள பந்தையொட்டி பொதுமக்களின் இயல்பு வாழக்கைக்கும், வாகன போக்குவரத்திற்கும் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்திற்கும் எவ்வித குறைபாடும் நேராமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.