October 28, 2022 தண்டோரா குழு
கோவை விமான நிலையத்தில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் கூறியதாவது,
கோவையில் இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதுதான் எனது எண்ணம் என தெரிவித்தார். கோவைக்கு வந்துள்ளதால் அந்த கருத்தினை தான் தன்னால் தற்பொழுது சொல்ல முடியும் எனவும் கூறினார்.பாராபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு NIA விசாரணை உதவி செய்யும் என தெரிவித்தார்.
மேலும் அனைவரும் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்கிறோம் என்பதற்கு ஒரு உத்திரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்பதும் எனது கருத்து என தெரிவித்தார்.இதை ஆளுநராக இல்லாமல் கோவையின் மருமகளாய் கூறுவதாகவும், கோவை மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு வரவேண்டும் என கூறினார்.
இச்சம்பவத்திற்கு முன்பே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் அதனை முற்றிலும் ஆராய்ந்தது இதை போன்ற இடங்கள் எங்கும் இல்லை என்பதை தமிழக காவல் துறை உறுது செய்ய வேண்டுமெனவும் கார் வெடிக்கும் வரை நமக்கு எப்படி தெரியாமல் போனது என ஆராய வேண்டுமென கூறினார்.இதில் முழு கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் குண்டு வெடித்து பாஜக சொல்லி தான் மக்கள் பீதி அடைய வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.மக்கள் அனைவரும் தொலைக்காட்சிகளை பார்த்து அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளதாக கூறினார். மற்றவர்களை குறை சொல்லாமல் என்ன குறை என பார்ப்பது நல்லது என தெரிவித்தார். பாஜக கடையடைப்பு போராட்டம் அறிவித்தது குறித்த கேள்விக்கு ஜனநாயக நாட்டில் பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்வது போல் எதிர்ப்பை தெரிவிக்க இதுவும் ஒரு வழிமுறை என பதில் அளித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலையின் மீது NIA விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறியது குறித்த கேள்விக்கு அரசியல்வாதியாக பதில் அளிக்க தான் விரும்பவில்லை எனவும் மேலும் கட்சியின் தலைவர்கள் எதிர்க்கட்சி என சண்டை போட்டுக் கொள்ளுங்கள் அதைப்பற்றி தனக்கு கவலை இல்லை எனவும் எதுவாக இருந்தாலும் பாராபட்சமற்ற அணுகுமுறை இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் அரசியல் தலைவர்களை பொருத்தவரை சமூக வலைத்தளப் பதிவுகளில் நாகரீகமான முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதாகவும் மேலும் தமிழ் தமிழகத்தில் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் தமிழ் சரியாக கையாளப்பட வேண்டும் என்பது தமிழிசையின் ஆசை என தெரிவித்தார்.