October 28, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து கலெக்டர் சமீரன் கூறியதாவது:
தமிழக முதலமைச்சர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி கலெக்டருக்கு பரிந்துரைப் பட்டியலை அனுப்பி வைக்குமாறு கடிதம் எழுதினார். அதனடிப்படையில் கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் தேவைப்படும் திட்டங்கள், நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள முக்கியமான கோரிக்கைகள் மற்றும் பாலங்கள், சாலைப்பணிகள், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய முக்கியமான இத்திட்டங்களை அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நிதிகளை பெற்று தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்), பொள்ளாச்சி ஜெயராமன் (பொள்ளாச்சி), ஏ.கே.செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), தாமோதரன் (கிணத்துக்கடவு), பி.ஆர்.ஜி.அருண்குமார் (கவுண்டம்பாளையம்), வி.பி.கந்தசாமி (சூலூர்), கே.ஆர்.ஜெயராமன் (சிங்காநல்லூர்), அம்மன் கே.அர்ச்சுணன் (கோவை வடக்கு), அமுல் கந்தசாமி (வால்பாறை), வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), மாநகராட்சி கமிஷனர் பிரதாப், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.