October 28, 2022 தண்டோரா குழு
கோவையில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை நடந்த கார் வெடித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த சமேசா முபின் என்பவர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேர் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் உபா சட்டம் போடப்பட்டுள்ள நிலையில் 25 ஆம் தேதி கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி ஐந்து பேரையும் போலீசார் மூன்றுநாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் உக்கடம் வின்சென்ட் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ஜமேசா முபினின் உறவினர் அப்சர் கானை போலீசார் 26 ஆம் தேதி கைது செய்தனர்.
அப்சர் கானை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் அப்சர்கானின் வீட்டின் அருகில் ஒன்றாக நின்று பேசுவதும், வெடித்த கார் வழக்கமாக அப்சர் கானின் வீட்டு அருகில் நிற்பதும், சம்பவத்தன்று ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்சல்கானின் வீட்டருகில் கார் நின்றதும் தெரிய வந்தது.
மேலும் கைது செய்யப்பட்ட அப்சர் கான் உயிரிழந்த ஜமேசா முபீனுக்கு ஆன்லைனில் பொட்டாசியம் சார்கோல் சல்பர் உள்ளிட்ட வேதிப்பொருட்களை பறிமுதல் செய்து கொடுத்ததும் விசாரணையில் அம்பலமானது. இதனை அடுத்து அப்சர் கானை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் இருந்த லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்து கைது செய்யப்பட்ட ஐந்து பேர் இன்று உக்கடம் , ஜி எம் நகர் பகுதிகளில் உள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மூன்று நாள் கஸ்டடி முடிந்த நிலையில் மீண்டும் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 5 இல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனை அடுத்து மீண்டும் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்தோஸ் உத்தரவிட்டதன் பேரில் ஐந்து பேரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச்செல்லபட உள்ளனர். கடந்த முறை ஆஜர் செய்தபோது 8.11.2022 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.