October 31, 2022 தண்டோரா குழு
கோவையில் கடந்த 23″ஆம் தேதி டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் வெடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து NIA அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் அவர்களது கருத்துக்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.
கோட்டை ஈஸ்வரன் சுவாமியால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் பாஜக, இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு இந்து கட்சியினார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து கோவில் பூசாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பாஜகவினர் நிர்வாகிகள், இந்து மக்கள் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.
மேலும் கோவையில் பாஜக மகளிர் அணி சார்பில் கோவிலில் கூட்டு பிராத்தனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்டு கந்தசஷ்டி கவசத்தை வாசித்தார்.பாஜக மாநிலத் தலைவர் வருகையை ஒட்டி அக்கோவில் பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
கோவையில் பெரும் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோட்டை ஈஸ்வரன், முருகனுக்கு நன்றி கடன் செலுத்தி விட்டு கோவிலுக்கு மத நல்லிணக்கம் மத ஒற்றுமை கோவை மக்கள் என்னுடைய வாழ்க்கை பயணம் நன்றாக இருக்க வேண்டும் என்று கந்த சஷ்டி கவசத்தை ஒன்றாக பாடி உள்ளோம் என தெரிவித்தார்.
23″ஆம் தேதி அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அதன் பின்பே எட்டு நாட்களாக அரசியல் கட்சிகள் பத்திரிக்கையாளர்கள் பேசி வருகிறோம் என தெரிவித்த அவர் இதைத் தாண்டி கோவை செல்ல வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.1998 குண்டு வெடிப்பிற்கு பிறகு கோவையின் வளர்ச்சி என்பது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என தெரிவித்த அவர் அந்த குண்டு வெடிப்பிற்கு பிறகு கோவையின் வளர்ச்சி பின்னோக்கி சென்றுள்ளதாக கூறினார்.
கடந்த பத்து வருடங்களாக கோவில் உள்ள மக்கள் தொழிலதிபர்கள் கோவையை முன்னெடுத்து செல்கின்றனர் என கூறிய அவர் இந்த நேரத்தில் இந்த தற்கொலை தாக்குதல் நடந்திருந்தால் கோவை மாவட்டம் இன்னும் 20 வருடங்கள் பின்னோக்கி சென்றிருக்கும் என தெரிவித்தார்.அதனை தடுத்து நிறுத்திய முதல் காக்கும் கடவுள்களாக இப்பொழுது இருக்கக்கூடிய காவல் துறையினர் எனக் கூறிய அவர் துணை தாக்குதல் எதுவும் நடைபெறாத வண்ணம் உயிரை பணயம் வைத்து பணி செய்துள்ளதாக கூறினார்.
எனவே கோவை மாநகர காவல் துறையினருக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். சதிகார்கள் மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும் கூட கோவை மக்கள் ஒன்றாக இருப்பதாக தெரிவித்தார். 23ம் தேதி நடந்த சம்பவத்திற்கு பிறகு இங்குள்ள இஸ்லாமிய பெருமக்கள் மதகுருமார்கள் கூட நல்ல கருத்துக்களை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.கோவையில் உள்ள மக்கள் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது வன்முறையை கையில் எடுப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடாது என்பது எனது வேண்டுகோள் எனவும் தெரிவித்தார்.
மாநில அரசிடம் நாங்கள் வைத்துள்ள கேள்விகள் எல்லாம் மாநில அரசு நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே தவிர மாநில அரசை குற்றம் குறை காண்பிக்கவோ மாநில அரசுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல என தெரிவித்தார்.மேலும் சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட சில பொருட்கள் என சிலவற்றை (கோலிகுண்டு, ஆணி) காண்பித்தார். இன்னும் காவல்துறையினர் இதனை சிலிண்டர் வெடித்தது என்று கூறுவதற்கு என்ன காரணம் அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார்.
ஐ எஸ்.ஐ.எஸ் என்பது தவறான ஐடியாலஜி என இஸ்லாமிய மதத்தில் உள்ள குருமார்களே சொல்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
எனவே அவர்களை விடக்கூடாது அவர்களின் மீது கோபமாக தான் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.கூடிய விரைவில் இஸ்லாமிய குருமார்களையும் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் காவல்துறையில் சில கவனக்குறைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் உளவு பிரிவு சிலரை கண்காணிக்கும் பணியை தவற விட்டு விட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் காவல்துறையில் பணி சுமை உள்ளதாகவும் ஆள்பற்றா குறை இருப்பதாகவும் தெரிவித்தார்.மத்திய அரசு ஏற்கனே ஒற்றை ஓநாய் தாக்குதல் நடத்த கூடும் என முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. காவல்துறை எப்போதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு போய்விட கூடாது அதனை பாஜக கட்சி ஒரு வாய்ப்பாக வைத்து பேசவும் மாட்டோம், மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என கூற மாட்டோம். இச்சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் செய்யவோ அல்லது பலனடையவோ பாஜக கட்சி விரும்பாது என கூறினார்.
NIA இதனை டெரர் அடேக் என தற்போது கூற வேண்டிய அவசியம் இல்லை ஆனால் தமிழக அரசு ஏன் டெரர் அடேக் என குறிப்பிடவில்லை. பந்த் அறிவிப்பை பொறுத்தவரை கட்சியின் அலுவலகத்தில் இருந்து கூறினால் தலைவர் பொறுப்பாக முடியும் ஆனால் இது மாவட்ட நிர்வாகிகள் சில அமைப்புகள் முடிவெடுத்தது என தெரிவித்தார். 2022ல் 14 போராட்டங்களை நாங்கள் நடத்தி உள்ளோம் அதே சமயம் எங்களுடைய அனுமதியின்றியும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. எங்களை பொறுத்தவரை தமிழகத்திற்கு ஒரு பலமான அதிமுக தேவை அதை முடிவெடுப்பவர்கள் தொண்டர்களே எனவே அதிமுக கட்சி குறித்து கருத்து சொல்ல எனக்கு உரிமை இல்லை என கூறினார்.
மேலும் நான் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்கிறேன் என சொல்ல கூடாது, வரம்பு மீறும் போது, எப்படி செய்தியாளர்கள் தங்கள் மீது கோபம் கொள்கிறீர்களோ அதே போல் சில செய்தி ஊடகங்கள் குறி வைத்து ஒரே கேள்வியை கேட்டால் வருவது சகஜம் தானே என கூறினார்.பத்திரிக்கையாளர்களை பார்த்து யாரும் குரங்கு என்று சொல்லவில்லை பத்திரிக்கையாளர்களை பார்த்து “குரங்கு போல் தாவி தாவி வந்து என்னை பேச விடாமல் பேட்டி எடுக்கிறீர்கள்?” என்றுதான் நான் கூறியது இரண்டும் வேறு என தெரிவித்தார். இதனை அடுத்து செய்தியாளர்களுக்கும் அண்ணாமலைக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அது குறித்து நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் எனவும் தெரிவித்தார்.