November 5, 2022 தண்டோரா குழு
ப்ளைட் ஆப் ஃபேன்டசி என்ற பெயரில்
ரவுண்ட் டேபில் இந்தியா, மற்றும், லேடிஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகள் இணைந்து சென்னையை சேர்ந்த ஆதரவற்ற பள்ளி மாணவிகளை விமான மூலம் கோவைக்கு அழைத்து வந்து பல்வேறு பகுதிகளை சுற்றி காண்பித்தனர்.
ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும், லேடிஸ் சர்க்கிள் இந்தியா ஆகிய அமைப்புகள் சார்பில் ஆண்டு தோறும், ஆதரவற்ற குழந்தைகளின் விமான பயண ஆசைகளை நிறைவேற்றும் வகையில், அவர்களின் ஒரு நாளை, மறக்க முடியாத நாளாக மாற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக, சென்னையை சேர்ந்த எஸ் ஆர் எஸ் சர்வோதயா விடுதியில் உள்ள 15 குழந்தைகளின் விமான ஆசையை நிறைவேற்றும் வகையில், இன்று, காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலமாக, கோவை வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, சென்னை விமான நிலையத்தில், சின்னத்திரை நட்சத்திரங்களை சந்தித்து, உறையாடிய பள்ளி மாணவிகள், விமானம் மூலம் கோவை வந்தடைந்து கோவையில் உள்ள ஜி டி நாயுடு கார் மியூசியத்தை கண்டு களித்தனர்.
பின்னர் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் குழந்தைகளுக்கு, மதிய உணவு வழங்கப்பட்டது, தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், பங்கேற்று பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் திட்டத்தை பாராட்டினார். அனைத்து மாணவர்களின் ஆசைகளை ஈடேற்றும் வகையில் ப்ளைட் ஆப் பேன்டசி எனும் திட்டத்தின் மூலமாக கோவை வந்த மாணவிகளை வரவேற்பதாகவும் மாணவிகள் இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தங்கள் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும் மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் அவர் வழங்கினார். தங்களுக்கு இளம் வயதிலிருந்தே விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில் தற்போது அந்த ஆசை நிறைவேறியதாக மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.