November 7, 2022 தண்டோரா குழு
கோவையில் ஆன்லைன் உணவு மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோக சேவையில் புதிய உதயமாக மை க்ரோஷோ எனும் செயலி துவங்கியது.
வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் உணவு மற்றும் பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை படிப்படியாக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில்,கோவையை மையமாக கொண்டு மை க்ரோஷோ (MYGROZO) எனும் புதிய ஆன்லைன் உணவு விநியோக சேவை கோவையில் துவங்கியது.
உணவு மட்டுமின்றி மளிகை,உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஆன்லைன் வழியாக விநியோகம் செய்ய உள்ள இதன் புதிய செயலி துவக்க விழா கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியி்ல் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.. மை க்ரோஷோ செயலியின் நிர்வாக இயக்குநர், மனோஜ் தலைமையில் நடைபெற்ற இதில்,சிறப்பு விருந்தினர்களாக டோட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரஞ்சனா சிங்கால் குத்துவிளக்கேற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து பிரபல ஸ்ரீ அண்ணபூர்னா ஓட்டல் குழுமங்களின் தலைவர், சீனிவாசன் புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.அப்போது பேசிய அவர்,ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களின் உணவு ஆர்டர்களை தரமான பேக்கிங் மற்றும் அவற்றை கொண்டு செல்ல பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் எனவும், டெலிவரி செய்யப்படும் உணவு வகைகள் நல்ல தரத்துடன் குறிப்பாக குறைந்த வாடிக்கையாளர் சேவை கட்டணத்துடன் டெலிவரி செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆன்லைன் செயலியின் நிர்வாக இயக்குனர் மனோஜ்,
தற்போது ஆன்லைன் உணவு விநியோக சந்தையில் குறைந்த கட்டணத்தில் ஆன் லைன் செயலியில் உணவு விநியோகம் செய்யும் வகையில் இதனை அறிமுகம் செய்து வைத்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட உணவகங்கள் இதில் இணைந்துள்ளதாகவும், உணவு விநியோகம் செய்யும் பணியாளர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் வழிமுறைகள், சாலையில் வாகனம் இயக்கும் முறைகளை தெளிவாக பயிற்சி வகுப்புகள் நடத்தி அதன் பின்னரே, அவர்களுக்கு பணி வழங்குவதாகவும்,அவர் தெரிவித்தார்.
புதிதாக துவங்கப்பட்டுள்ள ஆன்லைன் உணவு விநியோக சேவையால் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பலருக்கும் வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.