January 7, 2017 தண்டோரா குழு
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் 30 கோடிக்கும் மேற்பட்ட எல்.ஐ.சி. பாலிசிதாரர்கள் பாதிக்கப்பட்டதாக எல்.ஐ.சி. காப்பீட்டு ஊழியர்கள் புகார் கூறியுள்ளனர்.
மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8 ஆம் தேதி அறிவித்தது. இதனால் இந்தியா முழுவதும் சாதாரண மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள், பொதுமக்கள் என போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க கொள்கையைக் கண்டித்து எல்.ஐ.சி. காப்பீட்டு ஊழியர்கள் கோவை, திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி. தலைமை அலுவலக வாளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பண மதிப்பிழப்பால் சிரமம் ஏற்பட்டதற்காக மத்திய அரசைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு உரிய நியாயம் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
“பண மதிப்பு இழப்பு குறித்த அறிவிப்பால் இதுவரை சரியான தீர்வு கிடைக்கவில்லை. மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது முதல் பெட்ரோல் பங்க், வங்கிகள், தனியார் நிறுவனங்களில் பழைய நோட்டுகள் வாங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.ஆனால், அரசுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவனத்தில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தியது.
இதனால், எல்.ஐ.சி. நிறுவனத்தில் உள்ள 30 கோடிக்கும் மேற்பட்ட பாலிசிதாரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழப்பத்தை மத்திய அரசு நீக்க, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.