November 12, 2022
தண்டோரா குழு
கோவை கவுண்டம்பாளையம்,லட்சுமி நகரை சேர்ந்தவர் ஆத்மா சிவக்குமார் (வயது 53) இவர் வ.உ.சி., பேரவை என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த வேலுமணி, உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோர் தனக்கு மிகவும் நெருக்கம் என்றும் அவர்களிடம் கூறி அரசு வேலை வாங்கித் தர முடியும் என்று கூறியும் பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி உள்ளார்.
வருவாய்த்துறை தோட்டக்கலைத்துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 68 பேரிடம் 2கோடியே 17 லட்சம் ரூபாய் அவர் மோசடி செய்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மாரிசாமி என்பவர் ஆத்மா சிவகுமார் தன்னிடம் கிராம நிர்வாக அதிகாரி வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 8 லட்சம் மோசடி செய்துவிட்டார் என்று கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பல மாதங்களாக தலைமறைவாக இருந்த ஆத்மா சிவக்குமாரை இன்று கைது செய்தனர்.அவரது உறவினர்கள் உள்ளிட்ட மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.இவர் மோசடி செய்த பணத்தில் இடையர்பாளையம்,லூனா நகரில் அப்பார்ட்மெண்ட் கட்டி 7 வீடுகள் வாடகைக்கு கொடுத்திருப்பதாக விசாரணயில் தெரிய வந்தது.