November 23, 2022 தண்டோரா குழு
கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவ மையம் மற்றும் ஹாலாஜிக் ப்ரெஸ்ட் அகாடமி இணைந்து, ஆசியாவின் முதல் மார்பக புற்றுநோய் சிகிச்சை தொடர்பான தொழில்நுட்ப பயற்சி மையம் கோவையில் துவங்கியது.
மார்பக புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய மார்பக இமேஜிங் தொழில்நுட்பம் தமிழகத்தின் முன்னனி மருத்துவமனைகளில் பயன்படுத்தபட்டு வருகின்றது. இந்நிலையில் இது தொடர்பான தொழில்நுட்பத்தை மருத்துவர்களுக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் தேவையான பயிற்சிகள் அளிக்கும் விதமாக கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகத்தில் மார்பக புற்றுநோய் சிகிச்சை தொடர்பான தொழில் நுட்ப பயிற்சி மையம் துவங்கப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், கேஎம்சிஹெச் மருத்துவமனை செயல் இயக்குனர் அருண் என். பழனிசாமி மற்றும் ஹோலோஜிக் நிறுவனத்தின் ஆசிய மண்டல உதவி தலைவர் மற்றும் பொது மேலாளர் லிண்டா சியா ஆகியோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்த்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில், கேஎம்சிஹெச் மருத்துவமனை கதிரியக்க சிகிச்சை துறை தலைவர் டாக்டர் மேத்யூ செரியன்,. மார்பக புற்று நோய் சிகிச்சை பிரிவின் தலைமை மருத்துவர் ரூபா ரங்கநாதன்,வர்த்தக இயக்குனர் வெங்கட்ராமன், இந்திய பிராந்திய வர்த்தக மேலாளர் பவுல் ஸ்டீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அருண் பழனிசாமி,
மார்பக சிகிச்சைக்கு என்றே இரு பிரத்யேக மருத்துவ நிபுணர்களைப் பெற்றுள்ள இந்தியாவின் ஒருசில மருத்துவமனைகளில் கேஎம்சிஹெச்-ம் ஒன்று. அதுமட்டுமல்ல, மார்பக இமேஜிங்கில் ஃபெலோஷிப் பயிற்சி அளித்திட தேசிய தேர்வு அமைப்பிடமிருந்து அங்கீகாரம் பெற்றுள்ள இந்தியாவின் முதலாவது மருத்துவ மையம் என்ற சிறப்பையும் கேஎம்சிஹெச் பெற்றுள்ளதாகவும், மார்பக சிகிச்சை தொழில் நுட்பம் குறித்த பயிற்சி மையத்தில், ஆசியாவின் எந்த பகுதியில் இருந்தும் பயிற்சி பெற விரும்புவோர் இந்த கோவை மையத்தில் பயிற்சி பெறலாம் எனவும், மேலும் இந்த அகாடமியானது மார்பக இமேஜிங்கில் அடிப்படை அம்சம் முதல் அதிநவீன நுட்பங்கள் வரை பலதரப்பட்ட பயிற்சிகளை அளிக்கும் வகையில் செயல்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த பயிற்சிகள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் www.kmchbreastacademy.com. என்ற இணையதளத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.