November 25, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 60வது வார்டுக்குட்பட்ட ஜெய ஸ்ரீ நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் ஒருவர் டெங்கு கொசுவை போல் வேடம் அணிந்து டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கோவையில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மழைநீர் தேங்கும் பட்சத்தில் அதில் டெங்கு கொசு குழுக்கள் வளர வாய்ப்புள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 6500 தெருகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின்போது நல்ல தண்ணீர் தொட்டிகள், வீட்டில் தேவையற்ற பொருட்களை மழை நீர் படும்படியாக வைத்தல் போன்றவற்ற ஆய்வு செய்து அதில் அபேட் மருந்து ஊற்றியும், டயர், தேங்காய் மட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்தும் பணியிலும், மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் வருகின்றனர்.
மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் கட்டிடத்தின் மேல் பகுதியில் மழைநீர் தேங்கும் வண்ணம் இருந்தாலும் அல்லது குடிநீர் தொட்டி திறந்து இருந்தாலும் அதிலிருந்து கொசு புழுக்கள் வளர்வதற்கு காரணமாக இருந்தால் அதனை கண்டறிந்து அதனை அழித்தும், கட்டிட உரிமையாளர்களுக்கு ஆபரதம் விதித்தும் வருகின்றனர். இதனிடையே மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் படி டெங்கு கொசு விழிப்புணர்வை ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் ஒருவர் டெங்கு கொசுவாகவே மாறி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது அவர் டெங்கு கொசுவாகவே முழுவதுமாக வேடமடைந்து கைகளில் டயர்களை போட்டுக் கொண்டும், வாட்டர் பாட்டில்கள், சிரட்டைகள் போன்றவற்றை அணிந்தும் கொண்டும் ‘ நான்தான் டெங்கு உனக்கு ஊதுவேன்’ சங்கு என்ற முறையில் தெருக்களில் நடந்து வந்தார். இது மக்கள், குழந்தைகள் என அனைவருக்கும் விழிப்புணர்வும் அதிக அளவில் கிடைத்தது.