December 1, 2022 தண்டோரா குழு
தமிழக பள்ளிக்கல்வி துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மூலம் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் வகையில், கடந்த 14ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக கோவை நகரை சார்ந்த அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உறுதிமொழி எடுத்தல், விழிப்புணர்வு பேரணி, இணைவோம் மகிழ்வோம்,கலைநிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக ராஜ வீதியிலுள்ள துணிவணிகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளை சார்ந்த மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவினை உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் இளமுருகன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
மேலும் அரசு மகளிர் ஆசிரிய பயிற்சி முதல்வர் உமாதேவி, கோவை துணிவணிகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இப்போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.