December 1, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து நாளை (2-ந்தேதி) கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.
முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் போராட்டம் தொடங்குகிறது.இதில் முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க அரசு கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பதாகவும்,கோவையில் எந்தஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று கூறியும்,தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த உண்ணாவிரத போராட்டமானது நடக்கிறது.
கோவையை பொறுத்தவரை அ.தி.மு.க. கோவை மாநகர் மாவட்டம், புறநகர் வடக்கு மாவட்டம்,புறநகர் தெற்கு மாவட்டம் என 3 ஆக உள்ளது.இந்த 3 மாவட்டங்களிலும் மொத்தம் 11 தொகுதிகள் உள்ளன. 3 மாவட்டங்களில் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான தொண்டர்களை திரட்டி வரும்படி கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு தொகுதிக்கும் 5 ஆயிரம் பேரை அழைத்து வருவதற்கு கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
கோவையில் நடைபெறும் இந்த போராட்டத்தை வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான அச்சாரமாக கோவை அ.தி.மு.க.வினர் கருதுகின்றனர். அதற்கு ஏற்றார் வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்துவதற்கு திட்டமிட்டு தொண்டர்களை திரட்டி வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலை போன்று கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளை கைப்பற்றுவதற்கு வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர்.