December 2, 2022 தண்டோரா குழு
நகைகள் தயாரிக்கும் பட்டறை மற்றும் தொழிற்சாலைகளில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினர் பணியமர்த்தப்பட்டிருப்பது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் மாவட்ட தடுப்பு படையினர், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு, காவல் துறையினர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், சைல்டு லைன் அமைப்பு மற்றும் தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்களால் செட்டிவீதி, உப்பாரவீதி, பவிழம் வீதி உள்ளிட்ட மாநகர வீதிகளில் உள்ள 41 நிறுவனங்களில் சிறப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது 8 வளரிளம் பருவத்தினர்கள் மீட்கப்பட்டனர்.அதே போல் ராஜவீதி, உக்கடம், ஆத்துப்பாலம்,சுண்ணாம்பு காலவாய் மற்றும் சுந்தராபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 4 வளரிளம் பருவத்தினர்கள் மீட்கப்பட்டனர்.
இவ்விரு ஆய்வுகளும் சேர்த்து மொத்தமாக 12 வளரிளம் பருவத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் குறித்து தொழிலாளர் துறை தொலைபேசி எண் 0422 – 2241136, சைல்டுலைன் 1098 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.