December 5, 2022 தண்டோரா குழு
நூற்றாண்டு வைர விழாவில் தடம் பதிக்கின்ற கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் நிறுவனர் நாள் விழா பள்ளியில் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பள்ளியின் வளாகத்தின் முதன்மை அரங்கில் விழா நடைபெற்றது.விழாவில் ஆன்றோர் , சான்றோர்,முன்னாள் இந்நாள் ஆசிரியர்கள் , மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேடையில் ஆசிரியர்கள் பள்ளியின் வழிபாட்டுப் பாடலைப் பாடினர்.
ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் முதல்வர் செலின் வினோதினி வரவேற்புரை வழங்கினார்.பள்ளியின் நிருவாகத் தலைவர் மெர்சி ஓமன் விழாவின் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.பள்ளியின் தாளாளர் பிலிப் ஆர்.ஜே.பவுலர் விழாவின் விருந்தினர்களுக்கு பொன்னாடை புனைவித்து புகழ் சேர்த்தார்.
வால்ஷா ஜார்ஜ் கற்பித்தல் பணியில் வெள்ளி விழாக் கண்ட ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.பள்ளியின் நிருவாகத் தலைவர் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு நிறுவனர் நாள் விழாப் பரிசினை வழங்கி கௌரவித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கொங்கு மண்டலம் தந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் புதல்வரும் பள்ளியின் முன்னாள் மாணவருமான ஜி.டி.கோபால் அவர்களுக்கு முன்னாள் மாணவர்களின் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
விழா நிகழ்வில் ஜி.டி.கோபால் பேசும்
போது,
கடந்த காலங்களின் கனிவான வரலாற்றை நினைவு கூர்ந்தார்.” ஜி.டி.நாயுடு ஆங்கில மொழியைக் கற்பதற்காகவும்,சொந்தமாக ஒரு பேருந்தினை வாங்குவதற்காகவும் ஸ்டேன்ஸ் பள்ளியின் நிறுவனர் சர்.இராபர்ட் ஸ்டேன்ஸ் அவர்களிடம் பணியில் சேர்ந்தார். ஜி.டி.நாயுடுவின் விருப்பத்தை அறிந்த ஸ்டேன்ஸ் அவர்கள் ஜி.டி.நாயுடு பேருந்து வாங்குவதற்காக ஆக்கத்தையும் , ஊக்கத்தையும் கொடுத்து உதவினார். ஒற்றைப் பேருந்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் சுமார் அறநூறு பேருந்துகளைக் கொண்டதாக வானுயர வளர்ந்து நிற்கின்றது.
அதுமட்டுமல்லாமல் கோவை மாவட்டத்தின் பல்வேறு தொழிலகங்களுக்கு ஸ்டேன்ஸ் அவர்கள் ஒளியேற்றி வைத்தார் ” என்று ஜி.டி கோபால் அவர்கள் கூறினார். விழாவின் நிறைவாக ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் துணை முதல்வர் முனைவர்.வ. திவாகரன் அவர்கள் நன்றியுரை நவின்றார் .