January 9, 2017 தண்டோரா குழு
அங்கீகாரமில்லாத வீட்டுமனை விற்பனைக்கான தடையை ஜனவரி 30 ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அங்கீகாரமில்லா மனைகளை விற்பதற்குத் தடை விதித்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி உத்தரவிட்டது. இதனால், தமிழகம் முழுவதும் வீடு, மனை விற்பனை முடங்கியது.
இந்த வழக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்டோபர் 20ம் தேதி வரை பதிவான மனைகளின், மறு விற்பனையை அனுமதிப்பதற்கான அரசாணை நகல் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நிலங்களின் வகைப்பாட்டு விவரங்களைப் பட்டியலிட்டு, தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்பு, நவம்பர் 16, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறை செய்ய திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திட்ட செயலாக்கம் குறித்த, முழு விவரங்களை மூன்று வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 9ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், நிலங்களை வரன்முறைப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும், இரண்டு வார காலம் கூடுதல் அவகாசம் தேவை என்றும் அவர் கோரினார்.
அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், இரண்டு வார கால அவகாசம் அளித்ததுடன், இது தொடர்பான அறிக்கையை வரும் 30-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மேலும், பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை ஜனவரி 30 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.