December 14, 2022 தண்டோரா குழு
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (42), டாடாபாத் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (39). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போலி கம்பெனிகளை தொடங்கினர்.
பின்னர் இந்த கம்பெனிகளுக்கு வங்கி கணக்கு தொடங்கியதுடன், கிரடிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை ஸ்வைப் செய்யும் இயந்திரங்களையும் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் பெயரில் வாங்கினர்.இந்த நிலையில் இவர்கள் இருவரும் வெளிநாட்டு கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டனர். குறிப்பாக சீனா மற்றும் அயர்லந்து நாட்டை சேர்ந்த கிரடிட் கார்டுகளை பெற்று, அதனை மேற்கண்ட ஸ்வைப் இயந்திரங்களை பயன்படுத்தி ரூ.43 லட்சத்து 76 ஆயிரம் பணத்தை தங்களது கம்பெனிகளின் வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்தனர்.
இதன் பின்னர் அவர்கள் இருவரும் தலைமறைவாகினர். இதுகுறித்து கடந்த 2017-ம் ஆண்டு சம்பந்தப்பட்ட கிரடிட் கார்டு வங்கி அதிகாரிகள் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மனோகரன், தேவராஜ் ஆகிய இருவரையும் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.