January 9, 2017 தண்டோரா குழு
கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசாங்கம் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெட்ரோல் பங்குகளில் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டால் சலுகை உண்டு என அறிவித்திருந்தது.
இதனிடையே கார்டுகள் மூலம் நடைபெற்ற பணப்பரிவர்த்தனைக்கு 1 சதவிகிதம் வரி பிடித்துள்ளதாகக் கூறி பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் இனி கார்டுகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் பரிவர்த்தனை கிடையாது என அறிவித்திருந்தனர்.
இது குறித்து மத்திய அரசாங்கத்திடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதைத் தொடர்ந்து அந்த அறிவிப்பை உரிமையாளர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் பெட்ரோல் பங்குகள் மற்றும் வங்கிகளுக்கு இடையில் தற்போது நிலவும் சில பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
“டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் கிடையாது. கார்டு பரிவர்த்தனை மூலம் பெட்ரோல், டீசல் நிரப்பினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. பெட்ரோல் பங்குகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்குப் பரிவர்த்தனைக் கட்டணம் கிடையாது. கார்டு மூலமான பணபரிவர்த்தனைக்கு பெட்ரோல் பங்க்கோ அல்லது வாடிக்கையாளரோ கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஜனவரி 13ம் தேதிக்கு பிறகும் பெட்ரோல் பங்க்குகளில் பணப் பரிவர்த்தனைக் கட்டணம் கிடையாது” என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.