December 22, 2022
தண்டோரா குழு
கோவை ராஜவீதியில் 21 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.11 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களிலும்,தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனையைத் தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இதில், பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை மற்றும் தயாரிப்பு உறுதி செய்யப்பட்டால், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில், மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் தனபால் தலைமையிலான மாநகராட்சி அலுவலர்கள் கோவை 81ஆவது வார்டு, ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேக்கரி, சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட 42 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.இதில், 21 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து கடை உரிமையாளர்களிடம் ரூ.11 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.