January 9, 2017 தண்டோரா குழு
மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது விடுமுறைப் பட்டியலிலிருந்து பொங்கல் பண்டிகையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை தினம் கட்டாய விடுமுறை அல்ல.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”பொது விடுமுறை பட்டியலிலிருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் அரசு ஊழியர்கள், அந்த நாளன்று விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். உயர் அதிகாரிகள் விடுமுறை அளிக்க மறுத்தால் பணிக்கு வரவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தமிழகம் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் அனைவரும் மத்திய அரசு மீதும் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், பொங்கலைப் பொதுவிடுமுறைப் பட்டியலிலிருந்து மத்திய அரசு நீக்கியுள்ளதால், தமிழர்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பதாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.