December 24, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா தொற்று மீண்டும் சீனா, பிரேசில், பிரான்ஸ் நாடுகளில் அதிகளவில் பரவி வருகிறது. இந்தியாவில் ஒரிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் புதிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கோவை விமான நிலையத்தில் வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளை நோய் தொற்று பரிசோதனை செய்யும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
கோவைக்கு வரும் பயணிகளில் பொதுவாக 2 சதவீத நபர்களுக்கு சளி மாதிரி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர், ஆய்வக நிபுனர் ஆகியோர் கொண்ட 3 குழுக்கள் பணியில் இருந்து நோய் கண்காணிக்கும் பணியை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மேற்கொள்வார்கள்.
வெளி நாட்டிலிருந்து தங்கள் பகுதிக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வட்டார அளவில் சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரிசோதனையில் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டால் அவர்களது மாதிரி மரபணு சோதனைக்காக சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணிதல், கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி கழுவுதல், தனி மனித இடைவெளி கடைபிடித்தல், இருமல் தும்மல் ஆகியவை இருக்கும் பொழுது வாய் மற்றும் மூக்கு பகுதியை மூடிக்கொள்ளுதல் போன்ற பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதில் நோய் அறிகுறிகளுடன் வந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மற்ற பயணிகள் வீட்டில் தங்களை சுய கண்காணிப்பு செய்து கொள்ளவேண்டும். சுய கண்காணிப்பின் போது நோய் அறிகுறி தெரியவந்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு 1075 என்ற எண்ணில் பயணிகள் தெரிவிக்கவேண்டும்.