December 29, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சியின் விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேயரால் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.அதன் படி ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் ரூ. 648 என சம்பளத் தொகையை உயர்த்தி வழங்கிட சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை அனைத்து 100 வார்டு கவுன்சிலர்களும் ஏற்றதை அடுத்து மேயரால் இந்த தீர்மானம் அனுமதிக்கப்பட்டது.
அதன் பின்னர் மாமன்ற கூட்டத்தில் வ.உ.சி. சிறுவர் பூங்காவிற்கு கட்டணம் உயர்த்தி வசூலித்தல், வ.உ.சிதம்பரனாருக்கு முழு திருவுருவச் சிலையினை வ.உ.சி. பூங்காவில் பொதுப்பணிதுறை மூலம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்தல், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் கீழ் சேதமடைந்த தார் சாலைகளை சீரமைக்க ரூ.26 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து மூன்றாம் நபர் ஆய்வு மேற்கொள்ள ரூ.35 லட்சத்து 51 ஆயிரத்து 800 ஆகும்.
இதற்கான அனுமதி கோருதல், மாநகராட்சி பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு குடிநீர் இணைப்பு கட்டணமின்றி வழங்குதல், தெரு நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ள தெரு நாய் ஒன்றுக்கு ரூ.445 யில் இருந்து ரூ.700 என்ற வீதத்தில் முதல்கட்டமாக ஒரு மண்டலத்திற்கு 1000 தெரு நாய்கள் வீதம், 5 மண்டலங்களுக்கு 5000 தெருநாய்களை பிடிக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட 65 தீர்மானங்களுக்கு அனுமதி கோரப்பட்டது. இந்த தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.