January 3, 2023 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் மக்கும் குப்பைகளை வீடுகளுக்குச் சென்று சேகரிக்க 2 ஜி.பி.எஸ் பொருத்திய வாகனங்கள் சோதனை ஓட்டமாக கடந்த 2019ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது. இதனை அடுத்து மக்கும் குப்பைகளை சேகரிக்கும் 50க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் பொருத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையத்தில் உள்ள 9 வது வார்டு பகுதிகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ளன. இங்குள்ள வீடுகளில் மக்கும் கழிவுகளை சேகரிக்க மாநகராட்சியின் இரு வாகனங்களில் கடந்த 2019ம் ஆண்டு ஜி.பி.எஸ் கருவி பொறுத்தப்பட்டு சோதனை ஒட்டம் நடைபெற்றது.இந்த வாகனங்கள் சேகரித்து வரும் மக்கும் கழிவுகள் கவுண்டம்பாளையத்தில் உள்ள நுண் உரமாக்குதல் மையத்தில் கொட்டப்படுகிறது.
கோவை மாநகராட்சியின் குப்பை மேலாண்மை திட்டத்திற்கும், வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகள் சேர்வதை குறைக்கவும் இந்த நுண் உரமாக்குதல் மையம் முக்கிய பங்காற்ற இருக்கிறது. மாநகர் முழுவதும் தற்போது இதே போல் 22க்கும் மேற்பட்ட இடங்களில் நுண் உரமாக்குதல் மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
மக்கும் குப்பைகளை 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேகரித்து வருகின்றன. இதில் முதல்கட்டமாக 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனங்கள் எங்கு இருக்கிறது என்பதை அறிய முடியும். குப்பைகளை கொண்டு செல்லும் 30க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது” என்றார்.