January 10, 2017 தண்டோரா குழு
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசு ஒரு அரசாணையைக் கொண்டு வர வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை வலியுறுத்தினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசால் சட்டத் திருத்தம் கொண்டு வந்தாலும் சட்ட ரீதியாக அனுமதி வாங்க முடியாது. எனவே, ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த தமிழக அரசு ஒரு அரசாணையைப் பிறப்பிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடப்பதற்கு மத்திய அரசும், தமிழக பாஜகவும் முழு ஒத்துழைப்பு அளிக்கும். அதனை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் உணர்வு பூர்வமாக ஆதரவு அளிப்போம்.பொங்கல் விடுமுறை சர்ச்சை குறித்துக் கேட்கிறீர்கள்.
பொங்கல் விடுமுறை என்பது 15 ஆண்டு காலமாக சிறப்புப் பட்டியலில்தான் இருக்கிறது. புதிதாக எந்த அதிகாரப்பூர்வ பட்டியலிலிருந்தும் நீக்கவில்லை. பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு சனிக்கிழமை வருவதால் விடுமுறை நாளில் விடுமுறை அளிப்பதற்குப் பதிலாக வேறு நாள் எடுத்து கொள்ளலாம் என கூறியதைக் கட்டாய விடுமுறைப் பட்டியலிலிருந்து நீக்கியதாகத் தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அவசர அவசரமாக போராட்டம் நடத்துபவர்கள் முழுமையான தகவலைத் தெரிந்துகொண்டு போராட வேண்டும்.
பாஜக தமிழர்களுக்கு எதிரானது என சித்திரிக்க சூழ்ச்சிகள் நடக்கின்றன. அதற்குச் சில தலைவர்கள் துணை போகிறார்கள். சவந்தர்ராஜன் தமிழகத்திற்கு பல நன்மைகளை மத்திய பாஜக அரசு செய்துவருகிறது.இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.