January 7, 2023 தண்டோரா குழு
கோயம்புத்தூர் விழா 2023 ஜனவரி 4 ஆம் தேதி முதல் அனைவருக்குமான நிகழ்வுகளுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.2018 ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் விழாவின் 10 வது பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் கலை தெரு (Art street) , இந்த ஆண்டும் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வு கோவை மாவட்டத்தில் உள்ள கலைஞர்கள் பல்வேறு கலை வடிவங்களில் தமது திறமைகளை வெளிப்படுத்தும் களமாக அமைகின்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார்.
ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் ரேஸ் கோர்ஸ் வாக்கிங் சர்க்கிள், கோயம்புத்தூர் காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கு வெளியே நடைபெறுகிறது. இந்த ஆண்டு,80 கலைஞர்கள் தங்கள் கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.மேலும் வாக்கர்ஸ் பாதையில் பல்வேறு கலை நிறுவல்களும் அகாடமி ஆஃப் ஆர்க்கிடெக்ச்சரால் வைக்கப்பட்டுள்ளன.மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள கலைடாஸ்கோப் களை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
1500 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் தங்கள் கனவு வாழ்க்கையின் தோராயமான ஓவியங்களை அஞ்சல் அட்டையில் வரைந்து அதனை காட்சிபடுத்தியுள்ளனர்.இதில் கோவையின் கிராமப்புறங்களை சேர்ந்த 16 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 700 மாணவ, மாணவியரின் ஓவியங்களும் அடங்கும். இதற்கு ‘கனவுகளின் வானவில்’ என்று பெயரிடப்பட்டு இருந்தது.
மறுபுறம், தெய்வீக மற்றும் புராண உருவங்களின் கேரள சுவரோவியங்கள், கையால் செய்யப்பட்ட தலைகீழ் கண்ணாடி கலை போன்ற பல்வேறு வகையான கலைகள், கிரியேட்டிவ் கேலிகிராபி, 3-டி மோல்ட்ஸ் மற்றும் கலைப் படைப்புகள், பொன்னியின் செல்வனால் ஈர்க்கப்பட்ட வரலாற்று ஓவியங்கள், குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்களின் உருவப்படங்கள் மற்றும் பல காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கற்பகம் அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன், ரங்கநாதன் கட்டிடக்கலை கல்லூரி மற்றும் ரத்தினம் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் ஆகிய 3 கட்டிடக்கலை கல்லூரிகளுடன் இணைந்து தங்கள் கலை நிறுவல்களை காட்சிப்படுத்துகின்றன.
பிச்சுவாய் பெயிண்டிங், கேலிகிராபி, 3டி மாடலிங், காமிக் ஸ்ட்ரிப், குரோச்செட், களிமண் கலை, மட்பாண்டங்கள், மூங்கில் கூடை நெசவு போன்ற பல கலைப் படைப்புகள் அனைவருக்கும் வழங்க நிறைய பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.