January 8, 2023 தண்டோரா குழு
இந்திய கல்லூரிகளில் முதன் முறையாக கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய “நேரு சினிமா” தியேட்டரை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் துவக்கிவைத்தார்.
தமிழகம் மற்றும் கேரளாவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான நேரு கல்வி குழுமம் கடந்த 54 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி சேவையாற்றி வருகின்றது. கற்பித்தலுக்கு பின் மாணவ மாணவியர்களுக்கு தேவையான நூலகம், விளையாட்டுக்கூடம்,உடற்பயிற்சி கூடம், துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு போன்ற கட்டமைப்புகளை உருவாக்கி மாணவ மாணவியர்களை நல்வழிப்படுத்தும் பல அரிய முயற்சிகளை எடுத்து வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக இன்று கோவை திருமலையாம்பாளையத்தில் அமைந்துள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஊடகவியல் துறையின் சார்பில் புதியதாக நேரு சினிமா என்ற பெயரில் அதிநவீன தியேட்டர் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
இதை மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நேரு சினிமா லோகோவை வெளியிட்டு சினிமா அரங்கை துவக்கிவைத்தார்.பிரபல திரைப்பட நடிகரும் சில்வர் ஜுப்ளி ஹீரோவுமான நடிகர் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.கௌரவ விருந்தினராக பிரபல திரைப்பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி கலந்து கொண்டார்.
விழாவிற்கு நேரு கல்வி குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் அட்வகேட் டாக்டர். பி. கிருஷ்ணதாஸ் முன்னிலை வகித்தார். தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர். பி. கிருஷ்ண குமார் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த திரையரங்கமானது 200 இருக்கைகள் கொண்டு முற்றிலும் குளிர்சாதன வசதியுடன், டால்பி அட்மாஸ் சவுண்டு அமைப்புடன், 4கே மற்றும் 8கே தொழில்நுட்பம் கொண்ட திரையுடன் உருவாக்கப்பட்டள்ளது. அதில் நேரு கல்வி குழுமத்தில் விடுதியில் தங்கி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வாரம் ஒரு முறை திரைப்படம் வெளியிடப்படும், மேலும் இங்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குறும்படம் தயாரிப்போரின் குறும்படங்கள் இங்கு திரையிடப்படும்.
மேலும் வருடத்திற்கு ஒரு முறை சிறந்த குறும்படம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்கு சிறப்பு ஏற்பாட்டின் பெயரில் திரைப்படம் வெளியிடப்படும்.மேலும் சென்னையில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் முன்பு முக்கிய விருந்தினர்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிட்டு காண்பிக்கப்படும், அதை போல இங்கும் பிரிவ்யூ ஷோ திரையிடவும் முடியும். மேலும் அனைத்து வசிதிகளுடன் கூடிய ஸ்டுடியோவும் உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவர்களை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர். பி. அனிருதன் வரவேற்றார். விழாமுடிவில் மக்கள் தொடர்பு இயக்குனர் முனைவர் அ.முரளிதரன் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் நேரு சர்வதேச பள்ளி தாளாளர் சைதன்யா கிருஷ்ணகுமார்,நேரு கல்வி குழுமங்களின் முதல்வர்கள் டாக்டர். பி. மணியரசன்,டாக்டர். சிவராஜா, மோசஸ் டேனியல்,டாக்டர். ரவிகுமார், டாக்டர் பாலாஜி, நேரு கல்வி குழுமங்களின் பேராசிரியர்கள், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.