January 10, 2023 தண்டோரா குழு
டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பாவை அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமையேற்று சிறப்புச் செய்தார்.
அவர் தமது தலைமை உரையில் பேசும்போது,
உங்களுக்கு நாங்கள் வழங்கும் கல்வி ஒழுக்கத்துடன் கூடிய கல்வி ’உங்கள் வாழ்வின் உயர்விற்கும், தாழ்விற்கும் நீங்களேதான் காரணம்’ என்பதை மனதிர்கொண்டு செயல்பட வேண்டும், இக்கல்லூரியிலிருந்து பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர்கள் ஒரு நல்ல இந்தியக் குடிமகனாக செல்ல வேண்டும் என்று வாழ்த்தித் தமது உரையை நிறைவு செய்தார்.
கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் வி.கீதாலட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிப் பட்டங்களை வழங்கினார்.
அவர் தமது உரையில்,
தாங்கள் பெற்ற பட்டத்தை வைத்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார். கல்வி உயர்வு என்பது மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமையும் என்றார். நாடு வளர்ச்சி அடைந்தால் உலக அரங்கில் நிச்சயம் வளர்ந்த நாடாக அங்கீகரிக்கப்படும். அது நமக்குப் பெருமை தருவதாக அமையும் என்றார்.மேலும்,மாணவர்கள் கற்ற கல்வியைக் கொண்டு தங்களது வாழ்வை வளமாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நல்ல கல்வியறிவு மனிதனது சிந்தனையை விரிவாக்கும், வளமாக்கும் என்றார்.செல்வத்துள் எல்லாம் தலையாய செல்வம் கல்விச் செல்வம் அந்தச் செல்வத்தைப் பயன்படுத்தி வாழ்க்கையை வசப்படுத்திக் கொள்ளுதல் அவசியம் என்றார். டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி மற்றும் கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் மருத்துவர் அருண் பழனிசாமி இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். இவர்கள் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்கள்.
கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் ஓ.டி. புவனேஷ்வரன், டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே. ராஜேந்திரன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புச் செய்தனர். இவர்கள் பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரையும் வாழ்த்தினார்கள். கல்லூரியின் முதல்வர் முனைவர் வே.ராஜேந்திரன் அவர்கள் பட்டமளிப்பு உறுதிமொழியை வழங்கினார்.
இந்த விழாவில் மொத்தமாக 2341 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பட்டம் பெற்றனர். இளங்கலையில் 1995 மாணவர்களும், முதுகலையில் 336 மாணவர்களும் , ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டத்தை 10 மாணவர்களும் இந்நிகழ்வில் பட்டம் பெற்றனர். மேலும் இந்நிகழ்வில் என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் இயக்குனர் முனைவர் பெ.இரா.முத்துசாமி மற்றும் பல்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.