January 17, 2023 தண்டோரா குழு
முறையான டிக்கெட் இல்லாமல் பயணம், அனுமதியை மீறிய பயணம் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாக அதிகாரிகள் கூறியிருப்பதாவது:
முறைகேடுகளை தவிர்க்க டிக்கெட் பரிசோதகர் குழுவினர் அவ்வப்போது ரயில்களில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைகளின் போது முறையான டிக்கெட் இல்லாமல் பயணம், அனுமதியை மீறிய பயணம் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.இதன்படி, கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 1.63 லட்சம் பேரிடம் ரூ.11.33 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே போன்று வசூலிக்கப்பட்ட அபராத தொகையைவிட இது 61.18 சதவீதம் அதிகம் ஆகும்.
மேலும் அனுமதியை மீறி பயணித்த 17,770 பேரிடமிருந்து ரூ.89.76 லட்சமும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகப்படியான லக்கேஜ் எடுத்துவந்த மற்றும் லக்கேஜ் முன்பதிவு செய்யாத 432 பேரிடம் இருந்து ரூ.2.74 லட்சமும் அபராதமாக வசூலிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.