January 10, 2017 ஜாகர்
தேசிய அளவில் வாழைப்பழ உற்பத்தியில் முதலிடத்தில் இருந்து வந்த தமிழகம், அதன் முக்கியத்துவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உரம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பிறபகுதிகளில் உள்ள வாழை விவசாயிகள் வாழை உற்பத்தியைக் குறைத்துள்ளனர்.
பல்வேறு காரணங்களினால் தொடர்ந்து இழப்பு அதிகரித்து வருவதால், வாழை விவசாயிகள் பலரும் மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மாறி வருகின்றனர். இதனால், வாழை உற்பத்தி குறைந்து வருகிறது. இதன் காரணமாக விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
தமிழகம், மகாராஷ்டிரம் கர்நாடகம், குஜராத், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள்தான் வரிசைப்படி தேசிய அளவில் வாழை உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. இந்தியாவில் வாழையின் ஆண்டு உற்பத்தி 2.97 கோடி டன் ஆகும். தமிழகத்தின் வாழை சாகுபடி பரப்பளவு 2.85 லட்சம் ஏக்கர். இதில் ஆண்டுக்கு 56 லட்சம் டன் வாழைத்தார் உற்பத்தி ஆகிறது. வாழை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் பூவன், செவ்வாழை, ரோபஸ்டா, ரஸ்தாளி, விருப்பாச்சி, நேந்திரன் போன்ற வாழை வகைகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. வாழை உற்பத்தியில் தமிழகத்தின், கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி, கரூர், சேலம், மதுரை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில்தான் வாழை சாகுபடி அதிகம்.
கோவை மாவட்டத்தில் வாழை விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது. கோவை மாவட்டத்தின், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் போன்ற பகுதிகளில் வாழை விவசாயமே பிரதான தொழில். இங்கு மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் விளையும் வாழையின் தரமும் சுவையும் அதிகம் என்பதால் இந்திய அளவில் வரவேற்பும் அதிகமாக இருக்கிறது.
இது குறித்து மேட்டுப்பாளையம் பகுதியில் வாழை விவசாயம் செய்து வரும் செ. வேலுச்சாமி கூறுகையில்,
“ சுமார் 500 ஏக்கருக்கும் மேல் வாழை விவசாயம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் வாழைகளின் தரம் மிகவும் நன்றாக உள்ள காரணத்தினால் வெளி மாநிலங்களுக்கும் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது. வாழை விவசாயத்தை நம்பி மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன” என்றார்.
சமீப காலமாக தண்ணீர்ப் பற்றாக்குறை, பத்துமாத பயிரான வாழைக்குப் பயன்படுத்தும் உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் கடுமையான விலையேற்றம், சூறாவளி போன்ற திடீர் இயற்கைச் சீற்றம் மற்றும் வனவிலங்குகளின் தொந்தரவு போன்ற காரணங்கினால் வாழை விவசாயம் பாதிப்படைந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் இயற்கைச் சீற்றங்களால் சேதமடையும் வாழைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படாததும் விவசாயம் குறைந்தற்குக் காரணமாக உள்ளன.
இது குறித்து விவசாயி மா. தங்கவேல் கூறுகையில், “பல பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் கடன்களை வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். அவ்வாறு கஷ்டப்பட்டு விவசாயம் செய்தும் உரிய லாபம் கிடைக்காமல் சில சமயங்களில் நஷ்டம் ஏற்படுகிறது. மழை, புயலால் சேதம் அடையும் சமயத்தில் உரிய இழப்பீடு கிடைக்காமல் தவிக்கிறோம். இதே நிலை நீடித்தால் வாழை விவசாயத்தைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பம் போன்ற காரணங்கள் விளைச்சல் குறைகிறது. இது போன்ற காரணங்கினால் மாற்று விவசாயத்தை தேடி விவசாயிகள் செல்லக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
பணப் பயிரான வாழை அரசின் தோட்டக்கலைத் துறையின் கீழ் வருவதால் இத்துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள், வாழை விவசாயிகளுக்கு விளைச்சலுக்குத் தேவையான ஆலோசனைகள், நவீன வேளாண் தொழில்நுட்ப உதவிகள் செய்வதோடு வாழை விவசாயத்தில் நூறு சதவீதம் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்தி ஊக்குவித்தால் தண்ணீர்த் தேவை குறையும்.
அதே போல இயற்கைச் சீற்றங்களினால் வாழை மரங்கள் பாதிப்படையும் போது, உடனடியாக உரிய நிவாரணம் வழங்கினாலே வாழை உற்பத்தியை அதிகரித்து இதன் விலையினையும் கட்டுக்குள் வைத்திட உதவும்” என்கின்றனர் வேளாண் வல்லுநர்கள்.