January 19, 2023 தண்டோரா குழு
பழனி கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு கோவை,திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 27-ம் தேதி அக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் கோயில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதுதவிர தமிழகம் முழுவதிலும் இருந்தும் பல ஆயிரம் பக்தர்கள் பழனி கோயிலுக்கு வருவார்கள். அதே போல் கேரளா, கார்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இணையதளம் மூலம் முதலில் முன்பதிவு செய்யும் 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. கும்பாபிஷேகம் முடிந்தும் கூட அன்றைய தினம் பக்தர்கள் காத்திருந்து முருகனை தரிசித்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழனிக்கு பக்தர்கள் கூட்டம் அதிகம் வரஉள்ளதால் அவர்களின் வசதிக்கு ஏற்ப கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் எப்போதும் பழனிக்கு பக்தர்கள் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சிறப்பு பேருந்துகளை அதிக அளவில் இயக்கிட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.