January 10, 2017 அனீஸ்
“தமிழகத்தில் 2026ல்ம் ஆண்டு கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும். தமிழகம் முழுவதும் கட்டடங்களால் மறைக்கப்பட்டுள்ள ஏரி, குளம், குட்டைகளைத் தூர் வாரி சரி செய்தால் மட்டுமே பஞ்சத்திலிருந்து தப்பிக்கலாம்“ என்று என இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி எஸ். மணிவண்ணன் எச்சரிக்கிறார்.
“கோவை போஸ்ட்” இதழுக்கு அவர் அளித்த நேர்காணல்:
“தண்ணீர்ப் பஞ்சம் வரும் என்று எச்சரிக்கிறீர்கள்.. ஏன் அவ்வாறு பஞ்சம் வருகிறது.. ?”
“தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போய்விட்டன. குறிப்பாக நீலகிரியில் தென்மேற்குப் பருவமழை 50 சதவீதம், வடகிழக்குப் பருவமழை 10 சதவீதம் மட்டுமே பெய்துள்ளது. தமிழகத்தில் தற்போது மழை பெய்யும் முறை மாறிவிட்டது. நான்கு நாட்கள் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்துவிடுகிறது. இதனால், மழை நீர் நிலத்தடிக்குள் செல்லாமல் ஆறுகள் வழியாக கடலில் கலந்து விணாகி விடுகிறது.”
“அப்படியானால், இதற்கு என்ன தீர்வு?”
“தமிழகம் முழுவதும் 38,000 ஏரிகள், கண்மாய்கள் இருந்தன. ஆனால், தற்போது அவை காணாமல் போய்விட்டன. கோவை, சென்னை போன்ற பெருநகரங்களில் ஏரிகள், குளங்களாக இருந்த இடங்கள் எல்லாம் கட்டங்களால் மறைக்கப்பட்டு விட்டன.
அரசாங்கம் காணாமல் போன நீர்நிலைகளைக் கண்டுபிடித்து சரியான விதத்தில் தூர் வாரி பாதுகாக்க வேண்டும். தூர் வாரிய ஏரிகள், குளங்கள், குட்டைகளில் செயற்கை முறையில் நீரேற்றம் செய்து தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக மழை பெய்தாலும் மழை நீரைச் சேகரிக்கலாம்”
“குறைந்து வரும் நிலத்தடி நீரை பாதுகாப்பது எப்படி?”
“தற்போது, கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் வீடுகள் கட்டும்போது, வீடுகளைச் சுற்றிலும் மழைநீர் நிலத்தடிக்குள் செல்ல முடியாதவாறு சிமென்ட் போட்டு மூடப்படுகிறது. இதனால், போதிய மழை பெய்தாலும் அந்த நீர் சேகரிக்கப்படுவதில்லை. இதனை மாற்றவேண்டும். நாம் அன்றாடம் குளிப்பதற்கும், சமையல் அறையில் பயன்படுத்தும் நீரை விணாக்காமல், அந்த நீரை வீட்டுக்கு அருகே சிறு குட்டை அமைத்து மறு சுழற்சி முறையில் நிலத்தடிக்குள் செல்ல வழிவகை செய்யவேண்டும்”
“விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரை எப்படிப் பெறுவது?”
“தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும்போது விவசாயிகள் பண்ணைக் குட்டைகளை அமைத்து, பூமிக்கு மேல் உள்ள தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு அடுத்தபடியாக கிணறுகளைப் பயன்படுத்த வேண்டும். பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் மட்டுமே நிலத்தடி நீரைப் பயன்படுத்த வேண்டும்.
தண்ணீரை முடிந்த அளவு சிக்கனமாகப் பயன்படுத்த சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புநீர்ப் பாசனம் ஆகிய முறைகளைக் கையாள வேண்டும். அவ்வாறு செய்தால் நிலத்தடி நீரைச் சேமிக்க முடியும். இதே போல் விதிகளை மீறி லாரிகள் மூலம் தொழிற்சாலைகள், காட்டேஜ்கள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக எடுத்துச் செல்லும் தண்ணீரை முறைப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்”
இவ்வாறு முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் கூறினார்.