January 22, 2023 தண்டோரா குழு
இந்தியாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிகளுக்கான நிறுவனமான அவதார் குழுமத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனமான (Non Profit) அவதார் ஹியூமன் கேபிடல் டிரஸ்ட் (AHCT) சார்பில் கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் (KCLAS) 6 ஆவது உத்யோக் உத்சவ் நிகழ்வு நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் எம்.பிரதாப் ஐ.ஏ.எஸ். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறன் அறியும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.புத்ரி திட்டம் என்பது இந்தியாவின் முதன்மையான வளர்ச்சி திட்டமாக உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதை மையமாகக் கொண்டு புத்ரி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அவதார் ஹியூமன் கேபிடல் டிரஸ்ட் சார்பில், புத்ரி திட்டம் தொடங்கப்பட்டது முதல் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் உள்ள அரசு, மாநகராட்சிகளில் படித்த 10 ஆயிரம் மாணவிகளின் லட்சிய கனவுகளை மாற்றியுள்ளது.உத்யோக் உத்சவ் என்பது புத்ரி திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பின்தங்கிய மாணவிகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கவும், வேலைவாய்ப்பு பெறவும் முன்மாதிரியாக விளங்குகிறது.
கோயம்புத்தூரில் நடைபெற்ற உத்யோக் உத்சவ் நிகழ்ச்சியில் நகர்ப்புற மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகளுக்கு சுமார் 40 வகை திறன்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாணவிகள் தங்கள் பள்ளி கல்விக்குப் பிறகு வேலைவாய்ப்புகளை தேர்ந்தெடுக்க உதவும்.
உத்யோக் உத்சவ் நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் கேட்டர்பில்லர் இந்தியா, எமரால்டு ஜூவல்லரி இந்தியா நிறுவனம்,ஹெப்டகன், ராசி சீட்ஸ், செயின்ட் கோபைன், டெக்னோடர்ப், வேன்டிவியல் – சேவியோ இந்தியா, வே கூல் மற்றும் குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரி மற்றும் ஆர்.வி.எஸ். கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு திறன் பயிற்சிகளை வழங்கின.திறன் பயிற்சி மூலம் பல்வேறுதொழில்துறை பிரிவுகளில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை மாணவிகள் அறிந்து கொள்ள முடிந்தது.
மேலும் வேலைவாய்ப்பு சார்ந்த கருத்தரங்கில் பள்ளி மாணவிகள் வேலைவாய்ப்பு, உதவித்தொகை, தொழில் நிறுவனங்களில் தொழில் பயிற்சி மற்றும் வருங்கால வேலைவாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ளவும், விருப்பத்திற்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பாக அமைந்தது.
அவதார் குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவரும், அவதார் ஹியூமன் கேபிடல் டிரஸ்ட் (AHCT) நிர்வாக அறங்காவலரும், சமூக தொழில்முனைவோருமான Dr செளந்தர்யா ராஜேஷ் கூறுகையில்,
இந்தியா அதிக இளைஞர்களை கொண்ட நாடாக உள்ளது. வரும் காலங்களில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும் உள்ளது. மொத்த இந்திய மக்கள் தொகையில் பாதி பேர் 30 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் ஆவர். ஆண்டுக்கு சுமார் 1.20 கோடி பேர் (12 மில்லியன்) வேலைதேடுபவர்களாக படித்து விட்டு வருகின்றனர். இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தில் இருந்தும் திறமையானவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். குறிப்பாக மாணவிகளில் வேலைவாய்ப்பு வழிகாட்டுதலும், வழிகாட்டுபவர்கள் இல்லாத நிலையில் உள்ளனர் என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
உத்யோக் உத்சவ் என்பது கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விரிவான திறன் பயிற்சி மூலம் மாணவிகளை அணுகி, அதன் மூலம் வேலைவாய்ப்பு சார்ந்த கல்வியைத் தேர்ந்தெடுக்கவும், தங்களுக்கு நிலையான வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்ளும் வகையில் அவர்களை உருவாக்குகிறது என்றார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் எம்.பிரதாப் பேசுகையில்,
அவதார் ஹியூமன் கேபிடல் டிரஸ்ட் நடத்தும் திறன் பயிற்சி மூலம் கோயம்புத்தூரில் உள்ள பள்ளி மாணவிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.இந்த நிகழ்ச்சியானது போதிய வாய்ப்புகளை அறிந்து கொள்ள சரியான பாதையை வழிவகுத்து கொடுத்துள்ளது. இதுபோன்ற திறன் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறும்போது வேலைவாய்ப்பில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமவாய்ப்பை அடையும் நிலை உருவாகும்.மேலும் பெண் தொழிலாளர் பங்கேற்பு குறைவாக உள்ள நாடுகளை ஒப்பிடும்போது, அதிக பெண் தொழிலாளர்களை கொண்ட நாடுகள் பொருளாதாரத்தில் மிக வேகமாக முன்னேறி வருவது நிரூபணமாகி உள்ளது. அதேபோல சமீபத்திய ஆய்வில், பெண் தொழிலாளர் பங்கேற்பு என்பது 10 சதவீதமாக குறையும்போது, அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதம் குறைவது தெரியவந்துள்ளது.
இன்றைய சூழலில் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அவசியமாகிறது. பின்தங்கிய பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் சார்ந்த திறன் பயிற்சிகளை கொண்ட புத்ரி திட்ட முன்முயற்சியை அரசு இணைந்து ஆதரித்து வருகிறது என்றார்.