January 25, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளதாவது:
கோவை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 6 ஆயிரத்து 255 மகளிர் சுய உதவிக்குழுக்களும், நகர பகுதிகளில் 5 ஆயிரத்து 225 மகளிர் சுய உதவிக்குழுக்களும் என மொத்தம் 11 ஆயிரத்து 480 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் கடந்த ஒன்றறை ஆண்டுகளில் ஊரக பகுதியில் 542 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்களும், 459 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கொண்டு சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
10 ஆயிரத்து 948 சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற 2 ஆயிரத்து 60 சுய உதவி குழுக்களுக்கு ரூ.62.46 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1276.22 கோடி வங்கி கடன் தொகையும், 40 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.14 கோடி பெருங்கடனும், சமுதாய முதலீட்டு நிதியாக 146 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.107.50 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
147 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி சிறப்பு குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.22.05 லட்சமும், பண்ணை சார் வாழ்வாதார மேம்பாட்டின்கீழ் 187 விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.3.74 கோடி நிதியுதவியும் மற்றும் இயற்கை வேளாண் தொகுப்புகள், ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்புகள், விதை உற்பத்தி அலகுகள் அமைக்க ரூ.1.51 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வேளாண் கருவி வங்கிகள் அமைக்கும் திட்டத்தின்கீழ் 83 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.58.10 லட்சம் நிதியுதவியும்,புறக்கடைகோழி வளர்ப்பு திட்டத்திற்காக 229 மகளிர்களுக்கு ரூ.20.61 லட்சம் நிதியுதவியும், அசோலா வளர்ப்பு திட்டத்திற்காக 229 மகளிர்களுக்கு ரூ.11.45 லட்சம் நிதியுதவியும், பண்ணை சாரா தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக 450 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.50 கோடி நிதியுதவியும், சிறிய அளவிலான 4 பண்ணை சாரா தொழில் தொகுப்புகளை உருவாக்க ரூ.10 லட்சம் நிதியுதவியும் என மொத்தம் 10 ஆயிரத்து 948 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1297.46 கோடி நிதி யுதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.