February 1, 2023 தண்டோரா குழு
ஒன்றிய அரசின் பட்ஜெட் 70 சதவீதம் திருப்தியாக உள்ளதாக கோவை தொழில் துறையினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஒன்றிய அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 5-வது பட்ஜெட் இதுவாகும். மக்கள் மற்றும் பல்வேறு துறையினருக்கும் சலுகைகள், திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் முக்கியமாக ரயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கபட்டுள்ளது.தனிநபர் வருமான உச்ச வரம்பு ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? என்பது குறித்து இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் (இந்திய வர்த்தக சபை மற்றும் தொழிற்துறையினர்) நேற்று கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
தலைவர் ஸ்ரீ ராமுலு, முன்னாள் தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசின் இந்த பட்ஜெட் மூலம் 2024ம் ஆண்டு நாட்டின் மொத்த வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும். பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரயில்வேக்கு ரூ.2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கியதும், சாலைகளுக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பதும் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும் எனவும், மாநகராட்சியில் செப்டிங்க் டேங்க கிளீனிங் முழுமையும் இயந்திர மயமாக்கப்படும் என தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
நிறுவனங்களுக்கு பெரியளவு வரி குறைப்பு எதுவும் செய்யப்படவில்லை. வரி மாற்றம் வருமா? என எதிர்பார்த்த நிலையில் பட்ஜெட்டில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 80ம் நம்பர் நூல், 100ம் நம்பர் நூல் போதிய அளவு இருப்பு இல்லை. இதன் உற்பத்தியை பெருக்க திட்டம் போட்டு நிறைவேற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரைன் மற்றும் பிசரீஸ் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 157 நர்சரி கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். அதற்கு பதிலாக 450 கல்லூரிகளாக இருந்திருந்தால் மிகவும் பயன் உள்ளதாக இருந்திருக்கும்.
இந்திய அளவில் 40 சதவீதம் கல்வெட்டுகள் தமிழகத்தில் உள்ளன.இதனை ஆவணப்படுத்தவும்,கல்வெட்டு ஆராய்ச்சி மையம் வரும் எனவும் தெரிவித்துள்ளனர். காற்றாலை மின்சாரம்,சோலார் பேனல் மூலமும் 5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1 கோடி விவசாயிகள் இயற்கை வேளாண்மை செய்ய ஊக்குவிக்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தொழிற் பயிற்சியும், வெளிநாட்டு வேலைக்கு செல்லவும் உதவி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுதானிய விற்பனைக்கு வணிக வளாகங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த பட்ஜெட் தாக்கல் வர இருக்கின்ற 2024ம் ஆண்டு தேர்தலை சுட்டிக்காட்டுகிறது.
ஒன்றிய அரசு இளைஞர்களை ஊக்குவிக்கவும், விவசாயம் செழிக்கவும் உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஓராண்டில் ரூ.22.80 லட்சம் கோடி வருவாய் வந்துள்ளது. ரூ.10 லட்சம் கோடி தொழிற் துறையை கட்டமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.20 லட்சம் கோடி விவசாய கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 47 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக ஒன்றிய அரசின் இந்த பட்ஜெட் எங்களுக்கு 70 சதவீதம் திருப்தியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
உடன் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் து.தலைவர்கள் சுந்தரம், ராஜேஷ், செயலாளர் அண்ணாமலை மற்றும் பொருளாளர் வைஷ்ணவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.