February 2, 2023 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின்படி கோவை மாநகராட்சி பந்தய சாலை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாதிரி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின் ஒரு பகுதியாக தாமஸ் பார்க் சந்திப்பில் அலங்கார கற்கள் அமைக்கும் பணி நடைபெற்று முடிவற்றது.
அதனைத் தொடர்ந்து சந்திப்பின் மையத்தில் கண் கவர் மின்னொளி விளக்குகளுடன் கூடிய மீடியா டவர் அமைக்கப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில்,
‘‘இந்த மீடியா டவரின் உச்சியில் தெற்கு ஆசியாவில் முதன்முறையாக பொதுமக்களை கவரும் வகையில் சராசரியாக 8.15 மீ சுற்றளவு மற்றும் 1.70 மீட்டர் உயரமுள்ள காணொலி அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த காணொலி அமைப்பில் நேரடி காணொலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்த அமைப்பையும் ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இயக்குமாறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓரிரு வாரங்களில் முழுவதுமாக பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்’’ என்றார்.