February 4, 2023 தண்டோரா குழு
பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
தமிழ், தெலுங்கு உள்பட 19 மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம். அவருக்கு வயது 78.
வாணி ஜெயராம் 1971-ம் வருடப் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசை அமைப்பில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘மியான் மல்ஹார்’ ராகப் பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். வாணி ஜெயராமின் குரல் அறிமுகமும் அந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான ஜெயா பாதூரியின் (பின்னாளில் அமிதாப் பச்சனின் மனைவி ஆனார்) குடும்பப் பாங்கான தோற்றமும் இணைந்து பெரும் மாயத்தை செய்ய ரசிகர்கள் கிறங்கிப் போனார்கள்.
அறிமுகப் பாடலே அபார வரவேற்பைப் பெற்றது. அந்த ஒரு பாடலே வாணி ஜெயராமை முன்னணிப் பாடகியரின் வரிசையில் இடம்பெறச் செய்தது. இன்று ரசிகர்களால் ‘வாணி அம்மா’ என்று அழைக்கப்படும் அவரது திரையிசைப் பயணம் எழுதி முடிக்க முடியாத சாதனைகளை உள்ளடக்கியது. ஏனெனில் அவர் பாடாத இந்திய மொழியே இல்லை எனும் அளவுக்குச் சாதனைகள் படைத்திருக்கிறார். மதங்களைக் கடந்து பக்திப் பாடல்களையும் தனி ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்.
‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ ‘சங்கராபரணம்’ படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’,‘ஸ்ருதிலயாலு’ தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ ஆகிய பாடல்களுக்காக மூன்று முறை அகில இந்திய சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அவர் காலமானார். 78 வயதான வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வாணி ஜெயராம் படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் குடியரசு தினவிழாவையொட்டி அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.