February 4, 2023 தண்டோரா குழு
கே.சி.டபிள்யூ.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் 40 ஆண்டுகளுக்கும் முன்னர் பயின்ற மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டு தங்கள் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.
கோவை கே.சி.டபிள்யூ. பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பர்ப்பிள்ஸ் டே எனும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி தலைமை தாங்கினார். செயலர் டாக்டர் யசோதா அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் சுமார் 1970 களில் பயின்ற மாணவிகள் முதல் 2000 ஆம் ஆண்டு பயின்ற மாணவிகள் என பல்வேறு காலகட்டங்களில் பயின்ற மாணவிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கல்லூரி கால நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக, முன்னாள் மாணவியான கவிதாயினி உமா மகேஷ்வரி,கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் சுமார் ஐந்து இலட்சம் மதிப்பிலான கல்வி உதவி தொகையை முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாக உறுப்பினரான சுகந்தா சம்பத்குமார் கல்லூரி முதல்வர் மீனாவிடம் வழங்கினார்.மேலும்,விழாவில், முன்னாள் மாணவர்கள் அமைப்பு கல்வியாளர்கள் நிர்வாகிகள் மற்றும் தொழில் முனைவோர் என சமூகத்தின் நல்வாழ்வில் தங்கள் பங்களிப்பை வழங்கிய 60 முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவிகளான செல்வி லாவண்யா சங்கரின் நடன நிகழ்ச்சியும்,சாய்கிரண் ராயப்ரோலுவின் ஸ்டாண்ட் அப் காமிக் நிகழ்ச்சியும் நடைபெற்றது.