February 6, 2023 தண்டோரா குழு
சீமைக்கருவேல மரங்களை வாயுப்பொருளாக மாற்றும் புதிய தொழில் நுட்பத்தை கோவையில் செயல்படுத்த உள்ளதாக திண்டுக்கல் விஞ்ஞானி அப்துல் அஜீஸ் கோவையில் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ்.ஜெனரேட்டர் தொடர்பான துறையில் பணியாற்றிய இவர்,ஜெனரேட்டர் வெளியிடும் அதிக புகையை குறைப்பது தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியை தொடர்ந்து பல்வேறு புதிய கண்டு பிடிப்புகளை வெளியிட்டு அசத்தியுள்ளார்.அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான எந்த பட்டபடிப்புகளும் இல்லாத இவர்,உலகிலேயே முதல்முறையாக காற்றில் உள்ள நைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தி மத்திய அரசில் இருந்து ரூபாய் 5 லட்சம் அன்பளிப்பு பெற்றுள்ளார்.
மேலும் கார்பன் டை ஆக்சைடு பெட்ரோலுடன் சேர்த்து இருசக்கர வாகனத்தை இயக்கியும், மேலும் நீரிலிருந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை பிரித்து ஜெனரேட்டரை இயக்கியும் பெட்ரோலுடன் காற்றை கலந்து மூன்று மடங்கு மைலேஜ் அதிகரித்து காண்பித்து அதனை நிரூபித்தும் காட்டியுள்ளார்.மத்திய அரசின் நிதி உதவியுடன் வாகனங்களில் மைலேஜை அதிகரிக்கும் புதிய தாவர திரவத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் கோவை வந்த விஞ்ஞானி அப்துல் அஜீஸ்,சீமைகருவேல மரங்களை பயன்படுத்தி புதிய தொழில் நுட்பத்தை கோவையில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். தற்போது சுற்றுச்சூழல் பாதிப்புகளில் பெரும் சவாலாக உள்ள சீமை கருவேல மரங்களால் ஏற்படும் சூழல் பாதிப்புகளை குறைக்கும் முயற்சியாக அதை சிலிண்டரில் அடைத்து வாயு எரிபொருளாக மாற்றும் புதிய கண்டுபிடிப்பை தாம் கண்டறிந்துள்ளதாகவும்,இது தொடர்பான ஆலையை கோவையில் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.