February 9, 2023 தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்கு வாடகை பாக்கி வைத்துள்ள 6 கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை “சீல்” வைத்தனர்.
கோவை மாநகராட்சியில் 2022 – 2023 நிதியாண்டு முடிவடைய இன்னும் 50 நாள்களே உள்ள நிலையில், 5 மண்டல அலுவலகங்களில், வரி வசூலுடன் சேர்த்து, மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை நிலுவைகளை வசூலிக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், நீண்ட காலமாக வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, மேற்கு மண்டலம், 45ஆவது வார்டுக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.மார்க்கெட் வணிக வளாகத்தில் 6 மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாத 16 கடைகளின் வாடகைதாரர்களுக்கு பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் வாடகை செலுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில், 10 கடைகளின் வாடகைதாரர்கள் உரிய தொகையைச் செலுத்தினர்.
மீதம் 6 கடைகளின் வாடகைதாரர்கள் உரிய வாடகைத் தொகையை செலுத்தாததால், மேற்கு மண்டல மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 6 கடைகளைப் பூட்டி சீல் வைத்தனர். இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில், ரூ.15 லட்சத்து 4 ஆயிரத்து 54 வாடகை நிலுவை வசூலிக்கப்பட்டது.
மார்க்கெட்டில் 6 கடைகளின் வாடகைதாரர்களிடம் இருந்து 8 லட்சத்து 60 ஆயிரத்து 778 வாடகை வசூலிக்கப்பட வேண்டியுள்ளது என்றார்.