January 11, 2017 ஜாஹர்
கோவை மாவட்டத்தில் தமிழக அரசு கேபிள் இணைப்புக்கு மாத வாடகையும் முன்பணக் கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான காரமடை, சிறுமுகை, அன்னூர், மத்தம்பாளையம், சின்ன மத்தம்பாளையம், வீரபாண்டி பரிவு , பெரியநாயக்கண் பாளையம் ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சிகளுக்குத் தமிழக அரசின் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் கேபிள் இணைப்புக்கு முன்பணமாக ரூபாய் 220 மற்றும் மாத வாடகையாக ரூ. 70 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் கேபிள் இணைப்பில் எழுபதுக்கும் மேற்பட்ட சேனல்கள் உள்ளன. இதனால் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்கின்றனர்.
கேபிள் இணைப்பு இல்லாமல் டிஷ் மூலமாக இணைப்பைப் பெறும் போது அதற்கு முன்பணமாக ரூ 1500 முதல் 2000 வரை கட்டணம் செலுத்தப்படுகிறது. மாத வாடகையாக மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு சேனல்களைத் தேர்வு செய்து கட்டணம் செலுத்திக் கொள்ளலாம். அவ்வாறு செய்தால் கூட, மாதக் கட்டணமாக ரூபாய் 150 முதல் 200 வரை செலவாகும்.
இதன் காரணமாகவே தமிழக அரசின் கேபிள் கார்ப்பரேஷன் சார்பில் வழங்கப்படும் சேனல்களுக்குக் குறைந்த கட்டணமாக பொதுமக்களிடம் ரூ 70 வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதனை வசூலிக்கும் கேபிள் ஊழியர்கள் பொதுமக்களிடம் ரூ 100 வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே போல் முன்பணமாக ரூ 1000 வரை வசூலிப்பதுடன், இணைப்பை ரத்து செய்யும்போது, அந்த முன்பணத்தைத் திரும்பத் தருவதும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.
இது குறித்து பேராசியர் மற்றும் கோவை மாவட்ட ஊர் காவல் படை கம்பெனி கமாண்டர் எம். ஜெயகுமார் கூறுகையில்,
“மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள என்.சி.எம்.எஸ். காலனியில் வசித்து வருகிறேன். தற்போதுதான் அங்கு வீடு மாற்றிச் சென்றேன். கேபிள் இணைப்பு பெறுவதற்காக அப்பகுதி இணைப்பாளரிடம் கேட்டபோது முன்பணமாக ரூ. 1000 தரவேண்டும் என்று கேட்டதுடன் மாத வாடகையும் ரூ.100 கேட்கிறார். அது மட்டுமல்ல. சேவையும் தாமதமாகவே வழங்கப்படுகிறது. தரமான இணைப்பும் வழங்கப்படுவதில்லை. கேபிள் டிவி தாசில்தாரிடம் இது குறித்து தொலைபேசி மூலம் புகார் தெரிவித்துள்ளேன் “ என்றார்.
வாடகை வீடுகளில் குடியிருப்போர் வாடகைப் பிரச்சினை, பணியிட மாறுதல், போக்குவரத்து போன்ற பிரச்சினைகளால் மாறிச் செல்லும் நிலைமை உள்ளது. அது போன்ற சமயங்களில் அவர்கள் கேபிள் இணைப்புக்காகக் கொடுத்த முன்பணம் திரும்பத் தரப்படுவதில்லை. மாற்று இடங்களில் புதிதாக முன்பணம் கொடுத்துத்தான் கேபிள் இணைப்பு பெற வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தாசில்தார் வசந்தாமணி கூறுகையில்,
“கேபிள் இணைப்பிற்கு மாத வாடகையாக ரூ. 70 மட்டுமே பெற வேண்டும் . அதனை மீறி வசூல் செய்பவர்கள் மீது பொதுமக்கள் எங்கள் அலுவலகத்தில் புகார் மனு அளித்தால் கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.