February 20, 2023 தண்டோரா குழு
கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி அறநிறுவனங்களின் நிறுவனரும், கோவை மாநகரின் புகழ் பெற்ற கல்வியாளருமான டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் பிறந்த தினமான பிப்ரவரி 20ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் பி.எஸ்.ஜி அறநிறுவனத்தால் பணியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டும் பணியாளர்கள் தின விழா கோவை பி.எஸ்.ஜி கலை,அறிவியல் கல்லூரியில் உள்ள ஜி.ஆர்.டி.அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.இதில் தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார்.பி.எஸ்.ஜி அறநிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார்.
தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர்,
விழா நாயகர் ஜி.ஆர்.தாமோதரன் அவர்களின் இணையற்ற கல்விச் சேவை நினைவுகூர்ந்து, அவர் வழியில் புகழ்பெற்ற பி.எஸ்.ஜி நிறுவனங்கள் உலகத்தரத்துடன் கூடிய கல்வியை இன்றும் வழங்கி வருவது குறித்தும் வாழ்த்தி பேசினார்.மேலும்,இந்நிறுவனங்களில் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 15 பணியாளர்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி விருது வழங்கினார்.அத்துடன் 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 61 ஊழியர்களுக்கும் 2 நல்லாசிரியர்களுக்கும் விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெறும் 5 பணியாளர்களும் கவுரவிக்கப்பட்டனர். பணியாளர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.பி.எஸ்.ஜி அறநிறுவனம் ஒருங்கிணைத்திருந்த விழாவில்,பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் து.பிருந்தா நன்றியுரை வழங்கினார்.