February 22, 2023 தண்டோரா குழு
கோவையில் நடைபெற உள்ள அறிவொளி இயக்க குடும்ப விழாவில்,அறிவொளி இயக்கத்தின் மகத்தான சேவைகளை கூறும் வகையில்,அறிவொளி சுடர்கள் நூல் வெளியிடப்பட உள்ளது.
எழுதப் படிக்க தெரியாத 15 வயது முதல் 45 வயது வரை உள்ள சுமார் ஆறு இலட்சம் மக்களுக்கு எழுத்தறிவு புகட்டிய மகத்தான பணியை கோவை அறிவொளி இயக்கம் கடந்த ஆயிரத்து தொண்ணூறுகளில் மிகச் சிறப்பாக செய்திருந்தது.கல்வி சேவையில் மிகவும் போற்றுதலுக்குரிய இந்த சேவையை அறிவொளி இயக்கத்தின் நூற்றுக்கும் மேற்பட்டொர் இணைந்து மேற்கொண்டனர்.இந்நிலையில் சுமார் முப்பது வருடங்களுக்கு பிறகு அறிவொளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களின் குடும்ப விழா கோவை சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர்கள் மன்ற அரங்கில் நடைபெற்றது.இதில் அறிவொளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியன், மோகன் தாஸ் மற்றும் பலர் இணைந்து பேசினர்.அப்போது வரும் 26 ஆம் தேதி சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அறிவொளி இயக்க குடும்ப விழா நடைபெற உள்ளது.இதில் கடந்த 1990 முதல் 97 வரை அறிவொளி இயக்கத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை தொகுத்து புத்தகமாக அறிவொளி சுடர்கள் எனும் நூலை வெளியீடு உள்ளதாகவும்,இந்த நூலை ஓய்வு பெற்ற கூடுதல் தலைமைச் செயலாளரும் முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியருமான சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெளியிட உள்ளதாகவும் மேலும் விழாவில், தற்போதைய கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், மேயர் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது, கிருஷ்ணமூர்த்தி, அப்பாஸ், நாராயணசாமி, பால சண்முகம் உமாவதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.