February 28, 2023 தண்டோரா குழு
கல்லூரி மாணவர்கள் வழக்கமான கல்வி உலகை தாண்டி தொழிநுட்பம்,இயற்கை, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் ஆகியவற்றில் கலந்துகொள்ளவும் தங்களுக்கு இந்த துறைகளில் உள்ள திறமைமைகளை வெளிப்படுத்திடவும் கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களால் கொண்டுவரப்பட்ட துடிதுடிப்பான ‘யுகம்’ நிகழ்ச்சி மார்ச் 2 முதல் 4 வரை கோவை சரவணம்பட்டி குமரகுரு கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று கோவை பந்தய சாலையில் அமைந்துள்ள குமரகுரு சிட்டி சென்டர் வளாகத்தில் இன்று நடைபெற்றது. குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர் துறை டீன் (உதவி) விஜிலேஷ் தலைமையிலான மாணவர்குழு இன்று செய்தியாளர்களை சந்தித்தது.
அப்போது பேசிய அவர்கள்,
11வது முறையாக நடத்தப்படும் யுகம் நிகழ்வில் 100க்கும் அதிகமான நிகழ்ச்சிகள்,60க்கும் அதிகமான பயிலரங்கள் தென்னிந்திய மற்றும் மாநில அளவிலான 9 விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.கிட்டத்தட்ட 12,000 மாணவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர்.
யுகமின் ஒரு பகுதியாக மின்சார வாகனங்கள் குறித்த தேசிய மாநாடு, மாணவர்கள் நடத்தும் அங்காடி எனும் வர்த்தக கண்காட்சி, துளிர் எனும் தேசிய யோகாசன போட்டி,தொழில் முனைவோராக விரும்பும் மாணவர்கள் தங்களின் ஸ்டார்ட்- அப் திட்டத்தையும், தயாரிக்கவுள்ள பொருட்களையும் பற்றி விளக்கமளிக்கும் நிகழ்ச்சி, ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, ட்ரோன் பந்தய போட்டி,குறும்பட திரையிடல் மற்றும் சிறந்த குறும்பட தேர்வு நிகழ்ச்சி என 100+ நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
பல்வேறு தலைப்பில் நடைபெறும் மாநாடுகள் பிப்ரவரி 25 முதலே துவங்கிவிட்டதாகவும் இந்த மார்ச் 21 வரை நடைபெறும்.மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பிலான பரிசுகள் பரிசாகவும் ரொக்கமாகவும் யுகம் நிகழ்ச்சியின் கீழ் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு முக்கிய இடங்களை பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இத்துடன் மார்ச் 2ம் தேதி பாடகர் பிரதீப் குமாரின் இசை கச்சேரி நடைபெறுகிறது. மறுநாள் நாட்டிய கலைஞர் மற்றும் நடிகை ருக்மிணி விஜயகுமாரின் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும், தொழில்முனைவோர்களுக்கு யூட்யூப் மற்றும் வலைதளம் வழியாக தங்கள் நிறுவனத்தின் நிலையை உயர்த்துவது எப்படி, வர்த்தகத்தை உயர்த்துவது எப்படி என்ற தகவல்களையும், இன்றைய இளைஞர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் அனைவருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பற்றிய முக்கிய செய்திகளையும் வழங்கிவரும் சேரன் அகாடெமியின் நிறுவனர் ஹுசைன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியும் மார்ச் 3ம் தேதி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்