January 12, 2017 தண்டோரா குழு
இந்திய தேசியக் கொடிகள் பொறித்த, மிதியடிகளை விற்பனை செய்வதிலிருந்து அமேசான் நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டது.
“இந்திய தேசியக் கொடி பதிக்கப்பட மிதியடிகளை இணையதளம் மூலம் விற்பனை செய்வதாக அறிவித்த அமேசான் நிறுவனம் நிபந்தனையின்றி மன்னிப்புக் கோர வேண்டும். அல்லது இந்தியாவில் அமேசான் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட விசா திரும்பப் பெறப்படும்” என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எச்சரிக்கை விடுத்திரு்நதார்.
அதையடுத்து, அமேசான் நிறுவனம் தனது இணையதளச் சந்தையில் குறிப்பிட்ட பொருள் விற்பனை குறித்த பதிவுகளை விலக்கிக் கொண்டது.
அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதள நிறுவனங்கள் இணையதளம் மூலம் பல்வேறு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்றன. கனடா தேசத்தில் இயங்கும் அமேசான் நிறுவனம் இந்திய தேசியக் கொடி பொறித்த மிதியடிகளைச் சந்தைக்கு விற்பதாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது.
இந்திய தேசியக் கொடி பதிக்கப்பட்ட மிதியடிகளை அமேசான் இணைய வணிக நிறுவனம் விற்பனை செய்வது குறித்த புகைப்படத்தை ஒருவர் டுவிட்டர் மூலம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அனுப்பியிருந்தார். அதையடுத்து அவர் அமேசான் நிறுவனத்திற்கு அமைச்சர் சுஷ்மா எச்சரிக்கை விடுத்தார்.
உடனடியாக, கனடாவில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்புகொண்டு, அந்நாட்டின் ஆட்சியாளர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் புதன்கிழமை (ஜனவரி 11) கூறுகையில், “அமெரிக்க நாட்டின் அமேசான் நிறுவனம் இந்திய கொடியை அவமதிக்கும் பொருள்களை வாபஸ் பெற வேண்டும். மேலும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அமெரிக்க நாட்டின் அமேசான் அதிகாரிகளுக்கு இந்தியா நுழைவு இசைவு (விசா) தரப்படமாட்டாது. முன்னதாக வழங்கப்பட்ட விசாக்களையும் ரத்து செய்வோம். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமேசான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல கனடா நாட்டின் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
இந்திய சட்டத்தின் படி, தேசிய கொடியை அவமதிக்கும் நபருக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை தரப்படுவது வழக்கம்.
அமேசான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ “ட்விட்டர்” பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “இந்திய பொருள்கள் விற்பனை பக்கத்தில் மிதியடிகள் விற்கப்படவில்லை. இந்தக் குற்றசாட்டு கவலையளிக்கிறது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் இந்த எச்சரிக்கை வெளி வந்த பிறகு, அமேசான் விற்பனை அட்டவணையில் இருந்து மிதியடிகள் உடனே நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.