March 3, 2023 தண்டோரா குழு
ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி , டாக்டர் எஸ்.என்.எஸ்.ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி மற்றும் வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) சார்பில், வாளையார் வனப்பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் TK அசோக் குமார் உத்தரவின் பேரில்,
வனச்சரக அலுவலர் சந்தியா தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட வன அலுவலர் TK அசோக் குமார் காட்டின் முக்கியத்துவம் பற்றியும் குப்பைகளை பற்றியும் விழிப்புணர்வு உரை நிகழ்த்தி பணியை துவக்கி வைத்தார் உடன் ராக் ரவீந்திரன் , வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தீன்,வாஹித் மோகன்,பைசல்,விக்னேஷ் ரத்தினம் கல்லூரி ஆசிரியர்கள் சத்குரு ,ஞானசேகர், சவ்ந்தர்யா , ஆதித்யா , ராகேஷ் மற்றும் Dr Sns ராஜலட்சுமி கல்லூரி ஆசிரியர்கள் வெங்கடேஷ் லாவண்யா , சண்முக பிரியா கலந்து கொண்டு தன்னார்வலர்களை ஒருங்கினைத்தனர்.
வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தீன் கூறுகையில் :-
கோவை மாவட்டம், வாளையார் ரயில் பாதையானது இரு அடர்ந்த வனப்பகுதி வழியே பிரிந்து செல்லும் இரு பாதைகள் உள்ளன A ட்ராக் மற்றும் B ட்ராக் இவ்வழியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் இந்த ரயில் பாதையில் பயணிகளில் சிலர் காட்டுப் பகுதியில் வீசியெறியும் பிளாஸ்டிக் கழிவுகளால் இயற்கை சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. பயணத்தின் போது தாங்கள் எடுத்து வரும் பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட மீதமான திண்பண்டங்கள், காலியான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை வனம் சார்ந்த பகுதிகளில் வீசியெறிந்து செல்கின்றனர். இதனை இப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள், மான்கள், யானைகள் போன்ற விலங்கினங்கள், சிப்ஸ் போன்ற திண்பண்டங்களின் உப்பு சுவைக்காக அவற்றை பிளாஸ்டிக் கவரோடு உட்கொண்டு விடுகின்றன. இதனால், செரிமானம் ஆகாமல் வயிற்றில் தங்கி கடும் வலி ஏற்படுவதால் விலங்குகள் துடிதுடித்து உயிரிழக்கின்றன.
தடை செய்யப்பட்ட காட்டிற்குள் சென்று மது அருந்துவதோடு காலியான கண்ணாடி மது பாட்டில்களை வனத்திற்குள் வீசி செல்கின்றனர். இந்த கண்ணாடி மது பாட்டில்களை அறியாமல் மிதித்துவிடும் யானைகள் படும் வேதனை சொல்லில் அடங்காது. தரையில் வாழும் மிகப்பெரிய பேருயிரான யானைகளின் கால் பாதத்தில் கண்ணாடி துண்டுகள் புகுந்து தொடர்ந்த நடக்க இயலாமல் சாய்ந்து பல நாட்கள் வலியாலும், பசியாலும், தாகத்தாலும் அங்கேயே கிடந்தது உயிரிழந்து விடுகின்றன. இப்படி மனிதர்களின் அலட்சியத்தாலும் அறியாமையாலும் விலங்கினங்கள் மரணிப்பது தொடர் கதையாகி வருகிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்களில் பயணிகள் செயக்கூடாது என்று கூறினார்.