January 12, 2017 தண்டோரா குழு
தனியார் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் வருடாந்திர கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதிக்கு முறையான கணக்கு காட்டப்படுவதில்லை என்கிற புகாரை சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர். மேலும் இதற்கான வழிமுறைகளை உருவாக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
“முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் பெறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியைக் கண்காணிக்க எந்த வழிமுறையையும் உருவாக்காதது ஏன்?” என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
இதையடுத்து, வெளிநாட்டு நிதி உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
அதில், “தனியார் தொண்டு நிறுவனங்கள், 2014-15 ம் நிதியாண்டு முதல் தங்களது வருடாந்திர கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய வழக்கப்படி, காகித வடிவில் தாக்கல் செய்யப்படும் கணக்குகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது” என எச்சரிக்கை விடுத்துள்ளது.