March 7, 2023 தண்டோரா குழு
கோவையில் சாலையோரங்களில் பானிபுரி, பொம்மை கடைகள், டீ கடைகளை வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் நடத்தி வருகின்றனர். வதந்திகளை புறம் தள்ளிவிட்டு தங்களது பணிகளை அவர்கள் தொய்வின்றி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட நடைபாதை வியாபாரிகள் சங்கம் தலைவர் மணி கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் உள்ளனர். அவர்கள் சங்கத்தில் பதிவு பெற்றுள்ளனர். இதில் தமிழகம் மட்டுமல்லாது பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா உள்ள வடமாநில சாலையோர வியாபாரிகள் சங்கத்தில் உள்ளனர். அன்மையில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்திகளை குறித்து அவர் நலனின் அக்கறை கொண்டு சங்கம் மூலமாக ஆய்வு மேற்கொண்டாம். அவர்களும் எங்களிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
அப்போது பானிபுரி விற்கும் இடத்திலோ, பொம்மை விற்கும் இடத்திலோ எந்த பிரச்சனையும் இல்லை என்றார்கள். மேலும் தமிழகத்தில் எப்போதும் தொய்வு இன்றி எங்களது வியாபாரத்தை மேற்கொள்ளுவோம் என்றார்கள். தமிழக மக்கள் மிகவும் அன்பானவர்கள், ஒரு சிலர் செய்யும் தவறு காரணமாகவே இது போன்ற வதந்திகள் வருகின்றன. தமிழக அரசின் முயற்சியால் அந்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.