March 7, 2023
ஹோலி பண்டிக்கை மற்றும் வதந்தி காரணமாக கோவை மாவட்டத்தில் இருந்து 45 சதவீதம் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் தொழில் நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்களை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் மட்டுமே பல்வேறு தொழில்களில் 5 லட்சம் வடமாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதன் காரணமாக கோவையில் இருந்து அவர்கள் வெளியேறி வருவதாகவும், வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து கோவையில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கு கோவை ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர். இதனால் தொழில் நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்களை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்க (காட்மா) பொதுச்செயலாளர் செல்வராஜ் கூறியிருப்பதாவது:
கோவையில் உள்ள பவுண்டரிகள், சிறு,குறு தொழில் நிறுவனங்கள், பஞ்சாலைகள், பெரிய நிறுவனங்கள் என பல்வேறு தொழில்களில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் சுமார் 2 லட்சம் பேர் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கும் மற்றும் வதந்திகளை நம்பியும் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். சுமார் 45 சதவீத வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்ட காரணத்தால் ஏற்கனவே பெற்றிந்த ஜாப் ஆர்டர்களை குறித்த நேரத்திற்குள் உற்பத்தி செய்து கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
கொரோனா, ஜி.எஸ்.டி, உலக பொருளாதார மந்த நிலை என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தொழில் முனைவோர்கள் தொழில்களை நடத்தி வருகின்றனர். தற்போது தான் ஒரு 6 மாத காலமாக தொழில் சற்று மேம்பட்டு வந்தது. ஹோலி பண்டிகை கொண்டாட வழக்கமாக 20 சதவீதம் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அதுவும் இரண்டு மாதத்திற்கு முன்னரே சொல்லிவிட்டு தான் செல்வார்கள். இதனால் அதற்கு ஏற்றார் போல் தான் ஜாப் ஆர்டர்கள் பெறப்பட்டு பணிகளை கோவை தொழில் முனைவோர்கள் மேற்கொள்வார்கள். ஆனால் தற்போது கூடுதலாக 25 சதவீதம் வெளியேறியுள்ளனர்.
இன்னமும் வெளியேறி கொண்டே இருக்கின்றனர். அவர்கள் 10 நாட்களில் திரும்பி வந்துவிட்டால் நிலைமையை சற்று சமாளிக்கலாம். ஆனால் நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்து கொண்டால் அது தமிழக பொருளாதார வளர்ச்சியையே பாதிக்கும் நிலை உருவாகும். தற்போது தொழில் நிறுவனங்கள் தள்ளாட்டத்தை சந்தித்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.