March 8, 2023 தண்டோரா குழு
கோவையில் பழங்குடியினர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 26 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பழங்குடியினர்கள் வீடு கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சமவெளி பகுதியில் 269 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு ரூ.4.37 லட்சமும் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 90 மனித சக்தி நாள்களுக்கு கூலியாக ரூ.24 ஆயிரத்து 570 சேர்த்து மொத்தம் ரூ.4.62 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மலை பகுதியில் வீடுகள் கட்டுவதற்கு ரூ.4.95 லட்சமும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 90 மனித சக்தி நாள்களுக்கு ரூ.24 ஆயிரத்து 570 சேர்த்து ரூ.5.20 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.கோவை மாவட்டத்தில் 2022-23ம் நிதியாண்டில் பழங்குடியினர்கள் வீடு கட்டும் இத்திட்டத்தின் கீழ் 46 வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மதுக்கரை, பெரிய நாயக்கன்பாளையம் வட்டாரங்களில் 26 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பணியாணை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘பழங்குடியினர்கள் வீடு கட்டும் திட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது மதுக்கரை வட்டாரத்தில் சமவெளி பகுதியில் 19 பயனாளிகள், பெரிய நாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மலைப் பகுதியில் 6 பயனாளிகள் என 25 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டுவதற்கான பணியாணை வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.